சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (26.5.18) வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற்ற முடிந்தன. மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதியும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 23 ஆம் தேதியும் வெளியிடப்பட்டன.
இதனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வெழுதிய 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகததால் பெற்றோர்களும் இதுக் குறித்து கல்வி ஆணையத்திடம் அடிக்கடி கேட்டு வந்தனர்.
இந்நிலையில், நாளை(26.5.18) காலை சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதன் இணையதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.www.cbse.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் சுமார் 11.85 லட்சம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு எழுதினர். இந்தியா முழுவதும் 4,138 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
சிபிஎஸ்இ-யைப் பொறுத்தவரையில் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளுக்கு முந்தைய தினம் அதன் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.