சிபிஎஸ்இ 12 மற்றும் 10 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித மறுதேர்வு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 12 ஆம் வகுப்பின் பொருளாதார பாடம் மற்றும் 10 ஆம் வகுப்பு கணித பாடத்தின் வினாத்தாள்கள் தேர்விற்கு முன்பே இணையத்தில் கசிந்தது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த இரண்டு பாடங்களுக்கும் மறு தேர்வு நடத்தப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்தது.12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் பொருளாதாரம் பாடத்தின் தேர்வு ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும்.என்றும், 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களின் கணிதம் பாடத்தின் தேர்வு ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும், சிபிஎஸ்இ-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிறுவர்கள், பயிற்சி மைய உரிமையாளர் உட்பட 12 பேரை ஜார்க்கண்ட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மறுதேர்வுக்கு எதிராக 10 ஆம் வகுப்பு மாணவர் ரோகன்மேத்யூ உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கை நாளை(4.4.18) புதன்கிழமை விசாரிக்கிறது.
இதற்கிடையில், 10 வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடத்தில் மறுதேர்வு நடத்தப்படும் முயற்சி கைவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 10 வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடத்திட்டத்தில் மறு தேர்வு நடத்தப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுக்குறித்து டெல்லி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
,