சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம்: ஆசிரியர்கள் உட்பட 15 பேர் கைது!

ஆசிரியர்கள் உள்பட மேலும் 3 பேரை டெல்லியில் போலீசார் இன்று கைது செய்தனர்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 26-ம் தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வுக்கான வினாத்தாள் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முன்கூட்டியே வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. 28-ம்தேதி நடந்த 10-ம் வகுப்புக்கான கணிதத் தேர்வின் வினாத்தாளும் வெளியாகி டெல்லியில் சமூக வலைதளங்களில் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த இரண்டு பாடங்களுக்கும் மறு தேர்வு நடத்தப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்திருந்த நிலையில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளியல் மறுதேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிறுவர்கள், பயிற்சி மைய உரிமையாளர் உட்பட 12 பேரை ஜார்க்கண்ட் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், ஆசிரியர்கள் உள்பட மேலும் 3 பேரை டெல்லியில் போலீசார் இன்று கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட 2 ஆசிரியர்கள்தான் சிபிஎஸ்இ வினாத்தாளை லீக் செய்துள்ளனர். காலை 9.15 மணிக்கு சிபிஎஸ்இ வினாத்தாளை 2 ஆசிரியர்களும் போட்டோ எடுத்துள்ளனர்; வினாத்தாளை போட்டோ எடுத்து பயிற்சி மைய உரிமையாளருக்கு 2 பேரும் அனுப்பியுள்ளனர். அதன்பின்னரே அவர் மாணவர்களுக்கு அனுப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது’ என்றனர்.

×Close
×Close