புது டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மறைந்த பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 12 பேர் இறந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு ஒரு நாள் முன்பு பதிவுசெய்யப்பட்ட முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட செய்தி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
அந்த செய்தியில், மறைந்த பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத், 1971 போரில் இந்தியாவின் 50 ஆண்டுகால வரலாற்று வெற்றி மற்றும் இந்திய-வங்காளதேச நட்புறவை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் ‘ஸ்வர்னிம் விஜய் பர்வ்’ நிகழ்வில் ஆயுதப்படைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதில் அவர் “நம்முடைய ராணுவத்தால் நாம் பெருமைப்படுகிறோம். ஒன்றாக வெற்றியைக் கொண்டாடுவோம்” என்று சொல்வதைக் கேட்க முடிகிறது.
மேலும், அந்த செய்தியில் பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத் “ஸ்வர்னிம் விஜய் பர்வ் விழாவில் இந்திய ஆயுதப்படையின் அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் நான் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1971 போரில் வெற்றி பெற்றதன் 50வது ஆண்டு விழாவை விஜய் பர்வமாக கொண்டாடுகிறோம். டிசம்பர் 12 முதல் 14 வரை இந்தியா கேட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதி வளாகத்தில் விஜய் பர்வ் ஏற்பாடு செய்யப்படுவது பெருமைக்குரியது” என்று ஜெனரல் ராவத் கூறினார்.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நமது பாதுகாப்பு தலைமை தளபதி ராவத் மறைந்ததால் ‘ஸ்வர்னிம் விஜய் பர்வ்’ எளிமையாக கொண்டாடப்படும் என்றார். ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் புதன்கிழமை தமிழகத்தின் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.
1971-ம் ஆண்டு நடந்த இந்தியா - பங்களாதேஷ் போர் குறித்து பேசிய ராஜ்நாத் சிங், “பங்களாதேஷில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு இந்தியா பங்களித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் பங்களாதேஷ் வளர்ச்சிப் பாதையில் முன்னேறியதில் இன்று நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். 1971 போரில் இந்தியா வெற்றி பெற்றதற்கு காரணமான இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரரின் வீரம் மற்றும் தியாகத்திற்கு இன்று நான் தலைவணங்குகிறேன். அவர்களின் தியாகத்திற்கு நாடு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும்.” என்று கூறினார்.
இந்த நிகழ்வில், 1971ம் ஆண்டு போரின்போது பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் முக்கிய போர்களின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் காட்சிப்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழா டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.