ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத்தின் உடல்கள் டெல்லியில் உள்ள பரார் சதுக்கத்தில் 17 பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. அவர்களுடைய 2 மகள்களும் இறுதிச் சடங்கு செய்து பெற்றோரின் உடல்களுக்கு தீ மூட்டினர்.
குன்னூர் அருகே நேற்று முன் தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு நேற்று (டிசம்பர் 9) வெலிங்டன் ராணுவ பயிற்சிப் பள்ளியில் வைக்கப்பட்டது. அங்கே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர், பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் மற்று ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அங்கிருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று மதியம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை தளத்தில் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டன.
அங்கே அவர்களின் உடல்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, பாலம் விமாப்படை தளத்திலிருந்து பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் டெல்லி காமராஜர் சாலையில் உள்ள அவர்களது அதிகாரபூர்வ இல்லத்தில் வைக்கப்பட்டது. இன்று (டிசம்பர் 10) காலை பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கை, பூடான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் வந்து கலந்துகொண்டு அஞ்சலி செய்தனர். மேலும், அண்டை நாடுகளின் தூதரக உயர் அதிகாரிகள் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பரார் சதுக்கத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் உடல்கள் தகனம் செய்ய ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. அதன்படி முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
டெல்லில் சாலை எங்கும் மக்கள் இருபுறமும் நின்று முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத்துக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து, முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் உடல்களுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பிபின் ராவத் - மதுலிகா ராவத்தின் உடல்களுக்கு அவர்களுடைய மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி இருவரும் இறுதிச் சடங்குகளை செய்து பெற்றோர்களின் உடல்களுக்கு தீ மூட்டி தகனம் செய்தனர்.
அப்போது, முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத்துக்கு மரியாதை செய்யும் விதமாக பிபின் ராவத் முதல் முதலில் பணியாற்றிய கூர்கா படைப்பிரிவு 17 பீரங்கி குண்டுகளை முழங்க முழு ராணுவ மரியாதை செய்தனர். இறுதி நிகழ்ச்சியில் 800 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் முதல் பாதுகாப்பு தலைமை தளபதி பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் உடல் டெல்லியில் உள்ள பரார் சதுக்கத்தில் தகனம் செய்ததையடுத்ஹ்டு நாட்டு மக்கள் அவருக்கு விடை கொடுத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.