இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்களின் ட்விட்டர் ப்ளூ டிக் நேற்று (வியாழன்) இரவு திடீரென நீக்கப்பட்டது. முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி உள்ளிட்டோரின் ட்விட்டர் ப்ளூ டிக் திடீரென நீக்கப்பட்டது. இந்த நிலையில், ப்ளூ டிக் வசதிக்கான சந்தா செலுத்தாக நிலையில் பெரும்பாலான பிரபலங்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Advertisment
இந்தியாவில் ட்விட்டர் போன்ற தளங்களை ஒழுங்குபடுத்தும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் (MeitY) ப்ளூ டிக் அம்சத்தை இழந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் ப்ளூ டிக் அம்சத்தை இழந்துள்ளனர்.
அதேபோல் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, மகேந்திர சிங் தோனி மற்றும் ஸ்மிருதி மந்தனா போன்ற முக்கிய விளையாட்டு வீரர்களும் இதில் உள்ளனர்.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் சமூக வலைதளத்தை வாங்கினார். அதன் பின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். உயர் அதிகாரிகள் முதல் ஊழியார்கள் வரை பலரை பணிநீக்கம் செய்தார். இதன் ஒரு பகுதியாக ட்விட்டர் ப்ளூ டிக் சந்தா கொண்டுவரப்பட்டது. ப்ளூ டிக் வசதி என்பது பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை அடையாளம் காணவும், போலி கணக்குகளை முடக்கவும் கொண்டு வரப்பட்டதாகும்.
அந்த வகையில் ப்ளூ டிக் சந்தா மாதம் 8 அமெரிக்க டாலர்கள் என மஸ்க் நிர்ணயம் செய்தார். இந்த நிலையில் சந்தா செலுத்தாத காரணத்தால் ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“