தமிழ் நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் மற்றும் மருமகன் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை மற்றும் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குணால் கோஷ் மற்றும் சதாப்தி ராயின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது இரண்டுமே ஒரே மாதிரியானவையே.
மாநில சட்டசபை அல்லது மக்களவை தேர்தல் நடைபெறும் நேரங்களில் சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவை எதிர்கட்சி தலைவர்களின் வீடுகளில் சோதனையிடுகின்றன. அவர்களின் இத்தகைய நடவடிக்கையை, மத்திய புலனாய்வு அமைப்புகள் அரசியலால் தூண்டப்படுகின்றன என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினாலும் அவை மறுத்தே வருகின்றன. ஆனால் இது ஒரே மாதிரியாக காலங்காலமாக நடைபெற்று வருகிறது. பின்வரும் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு இதனை பார்க்க வேண்டும்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, கடந்த 2019 செப்டம்பரில் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி ஊழல் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மருமகன் அஜித் பவார் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
அதற்கு முன்பாக, ஆகஸ்ட் 2019ல், கோஹினூர் சி.டி.என்.எல் என்ற அழைக்கப்பட்ட ஐ.எல் அண்ட் எஃப்.எஸ் கடன் ஈக்விடிட்டி முதலீடு நிறுவனத்தில் ரூ.850 கோடிக்கு மேல் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரேவை அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியது. இதில் 2009 வரை தாக்கரே பங்குதாரராக இருந்தார். இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
மேற்கு வங்காளம்
இந்த ஆண்டு பிப்ரவரியில் நிலக்கரி மோசடி வழக்கில் டி.எம்.சி தலைவர் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜியை சிபிஐ விசாரித்தது. அபிஷேக் முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் ஆவார். மேலும், அபிஷேக்கின் உறவினரான மேனகா கம்பீரின் கணவர் அன்குஷ் அரோரா மற்றும் அவரது மாமனார் பவன் அரோரா ஆகியோரையும் சிபிஐ வரவழைத்தது.
சிட் நிதி தொடர்பான இரண்டு வெவ்வெறு வழக்குகளில் மார்ச் மாதத்தில் அமலாக்கத்துறை மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் முன்னாள் அமைச்சர் மதன் மித்ரா ஆகியோரை வரவழைத்தது. இந்த சட்டசபை தேர்தலில் இருவரும் போட்டியிடுகின்றனர்.
மார்ச் மாதத்தில் டி.எம்.சியின் ஜோராசங்கோ வேட்பாளர் விவேக் குப்தா, சாரதா நிதி மோசடி தொடர்பாக பல மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
கர்நாடகா
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் 5 வரை காங்கிரஸ் அரசில் அப்போதைய எரிசக்தித்துறை அமைச்சராக இருந்த டி.கே.சிவக்குமார் உடன் தொடர்புடைய 70 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. பெங்களூரு,மைசூரு,டெல்லி மற்றும் சென்னையில் அவரது குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறவிருந்த ராஜ்யசபா தேர்தலில் குஜராத் காங்கிரஸ் தலைவர் அகமது படேல் வெற்றிபெற குஜராத்தைச் சேர்ந்த 42 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்க்ளூருவில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த போது இச்சோதனை நடைபெற்றது.
2017 ஆம் ஆண்டு சோதனையின் அடிப்படையில் சட்டசபைக்கு முன்னதாக சிவக்குமார் மீது வரி ஏய்ப்பு மற்றும் தவறான ஆவணங்களை வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்தது தொடர்பாக, 2018 ஆம் ஆண்டில் வழக்கு பதிவுசெய்தது. 2018ல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக 2019ல் சிவக்குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஐ.டி விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
ராஜஸ்தான்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆளும் காங்கிரஸில் ஏற்பட்ட நெருக்கடியின்போது, முதலமைச்சர் அசோக் கெலாட்க்கு நெருக்கமான, ராஜீவ் அரோரா மற்றும் தர்மேந்திரர் ரத்தோர் உள்ளிட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஐ.டி மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அம்ரபாலி ஜூவல்ஸ் உரிமையாளரான அரோரா அப்போது மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக இருந்தார். ரத்தோர் ராஜஸ்தான் மாநில விதை கழகத்தின் தலைவராக இருந்தார்.
ஜூலை மாதம், சிபிஐ முன்னாள் ஒலிம்பியன் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ கிருஷ்ணா பூனியாவை, மே 23 அன்று சுருவில், காவல் அதிகாரி விஷ்ணு தத் பிஷ்னோய் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கேள்வி எழுப்பியது.
உர மோசடி தொடர்பாக அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசென் கெலாட்டின் சொத்துக்களை அமலாக்கத்துறை சோதனையிட்டது.
மத்திய பிரதேசம்
மக்களவவை தேர்தலுக்கு முன்னதாக, ஐ.டி அப்போதைய முதல்வர் கமல்நாத்திற்கு நெருக்கமானவர்களின் 52 இடங்களில் சோதனை மேற்கொண்டது.இதற்கு காரணம் வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகள் என்று ஐ,டி குற்றம் சாட்டியது.
சத்தீஸ்கர்
2018 ஆம் ஆண்டில் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பூபேஷ் பாகேல், சிடி ஊழலில் சிபிஐயால் குற்றம் சாட்டப்பட்டார். சிபிஐயால் கைது செய்யப்பட்ட வினோத் வர்மா பாகேல் முதல்வராக இருந்தபோது அவருக்கு அரசியல் ஆலோசகராக இருந்தார்..
கேரளா
ஜூலை 2020இல் தங்கம் கடத்தல் வழக்கில் கடுமையான உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. முதல்வரின் முதன்மை செயலாளரான சிவசங்கரை செப்டம்பர் மாதம் என்ஐஏ விசாரித்தது. அவரை அக்டோபரில் ஈ.டி.கைது செய்தது.
இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு சுங்கத்துறையும்,ஈடியும் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவின் பேரில் இந்தக் கடத்தல் நடந்ததாக கூறினார் என்று கூறின.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி சிபிஎம் மாநிலச் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகனை பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனால் பாலகிருஷ்ணன் பதவி விலக நேர்ந்தது.
கடந்த மாத தொடக்கத்தில் அந்நிய செலாவணி வழக்கு தொடர்பாக கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் அதிகாரிகளை ஈடி விசாரித்தது. அதில் முதல்வர் விஜயன் தலைவராக உள்ளார்.
தமிழ் நாடு
கடந்த ஆண்டு செப்டம்பரில் சில வங்கி அதிகாரிகள் மற்றும் திமுக செயல்பாட்டாளர் பூஞ்சோலை சீனிவாசன் மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்தது. வேலூரில் 2019 தேர்தலுக்கு முன்னதாக ஐ.டி நடத்திய சோதனையில் ரூ.11 கோடிக்கு மேல் கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில் இந்த வழக்கு அமைந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில், அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கில் திமுக எம்.பி எஸ்.ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.89 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஈடி பறிமுதல் செய்தது. ஒரு மாதத்திற்கு பிறகு இந்த வழக்கில் மற்றொரு திமுக எம்.பி கௌதம சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.6 கோடி சொத்துக்களையும் பறிமுதல் செய்தது.
ஆந்திரா
நவம்பர் 2018இல் ஆந்திர தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வங்கி கடன் தொடர்பான பண மோசடி வழக்கில் அப்போதைய தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஒய்.எஸ்.சவுத்ரி மீது ஈடி சோதனை நடத்தியது. அவரது பல சொகுசு கார்களையும் கைப்பற்றியது. 2019ல் ஏப்ரலில் நடந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து சவுத்ரி பாஜகாவில் இணைந்தார்.
தேர்தலுக்கு முன்னதாக ஐ.டி. மூலம் சோதனை நடத்தப்பட்ட பிறகே, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ரமேஷூம் பாஜகாவில் இணைந்தார்.
ஜம்மு & காஷ்மீர்
ஜம்மு & காஷ்மீரில் நடந்த டி.டி.சி தேர்தலுக்கு முன்னதாக என்.ஐ.ஏ, கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று பி.டி.பி இளைஞர் தலைவர் வாகீத்-உர்-ரஹ்மான் பர்ராவை பயங்கரவாத வழக்கில் கைது செய்தது.
டி.டி.சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்த ஒரு நாள் கழித்து பர்ராவை என்.ஐ.ஏ விசாரணைக்கு அழைத்தது. சிறையில் இருந்தபோதும் பர்ரா தேர்தலில் வெற்றி பெற்றார். ஜாமீன் வழங்கப்பட்ட அவர், பின்னர் ஜேகே காவல் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
டிசம்பர் 9 ஆம் தேதி டி.டி.சி தேர்தலின் 5 வது கட்டத்திற்கு வாக்களிப்பதற்கு ஒரு நாள் முன்பு பணமோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான ஃபாரூக் அப்துல்லாவின் சொத்துக்களை முடக்கும் தற்காலிக உத்தரவை ஈடி வெளியிட்டது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு முந்தைய ஜேகே நிலையை மீட்டெடுப்பதற்காக போராட முடிவு செய்த பிரதான அரசியல் கட்சிகளின் கூட்டணியான (குப்கர் பிரகடனம்) மக்கள் கூட்டணியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil