அமீரக உதவியை போலி கவுரவத்திற்காக மறுப்பதா? பிரகாஷ் காரத் கேள்வி

போலியான கௌரவத்தை நிலை நிறுத்த அமீரகத்தின் உதவியை மறுப்பது சரியல்ல - பிரகாஷ் காரத்

திரிபுரா மாநிலத்தில் நேற்று (24/08/2018) நடைபெற்ற இந்திய பொதுவுடமை  (மார்க்சிஸ்ட்) கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றார் அக்கட்சியின் தலைவர் பிரகாஷ் காரத். அவருடன் சீதாராம் யெச்சூரியும் பயணித்தார்.

அக்கூட்டத்தை முடித்துவிட்டு இருவரும் டெல்லி திரும்பும் சமயத்தில் அகர்தலாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார் பிரகாஷ் காரத். அப்போது அவரிடம் கேரள வெள்ளம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

பிரகாஷ் காரத் கேரள வெள்ள நிவாரண நிதி குறித்து

அதற்கு பதில் கூறிய பிரகாஷ் “தேசிய அளவில் கேரள மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை மக்கள் செய்து வருகிறார்கள். மேலும் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சேதாரம் ஏற்பட்டுள்ளது என்று கேரள அரசு கூறியுள்ளது. ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் மட்டுமே நிதி உதவி அளித்திருக்கிறது.

இதே நேரத்தில் நிறைய வெளிநாட்டு அரசுகள் கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டியிருக்கும் நிலையில் தவறான கொள்கைகள் காரணமாக அதனை மத்திய அரசு மறுக்கக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.

வெள்ள நிவாரணப் பணி அமீரகம்  நிதி உதவி

ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் பங்கிற்கு 700 கோடி ரூபாயை நிதியாக கொடுக்க முற்பட்ட சமயத்தில் மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டது மத்திய அரசு. இது சரியான நடவடிக்கை இல்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார் பிரகாஷ் காரத்.

மேலும் அமீரகத்தில் வேலை பார்க்கும் இந்தியர்களில் 80% கேரள மக்கள் தான். அமீரகம் உருவாவதற்கான பெரும் உழைப்பினை மலையாள மக்கள் கொடுத்துள்ளனர். அதனால் அவர்களுக்கு அமீரகம் நிதி உதவி அளிக்க  விரும்புவது இயற்கையானது.  ஆனால் இந்த நிதியை ஏன் மத்திய அரசு மறுத்தது என்று தான் புரியவில்லை.

இந்தியா ஒரு வல்லரசு நாடு என்றும், இந்தியாவிற்கு எந்த விதமான உதவி தேவையில்லை என்றும் போலியான கௌரவத்துடன் இருப்பது நல்லதல்ல என தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கைகளைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார்.

தேசிய ஜனநாய கூட்டணியின் கீழ் பாஜக அரசு 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. அச்சமயத்தில் இருந்து தலித் மக்கள், பெண்கள், பழங்குடி மக்கள் ஆகியோரின் வாழ்வு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது என்றும் பாஜக மீது குற்றச்சாட்டினை வைத்திருக்கிறார் பிரகாஷ் காரத்.

அமீரகம் நிதி உதவி – மறுப்பு

ஆனால் கேரளாவிற்கு 700 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதைப் பற்றி இது வரை நாங்கள் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என ஐக்கிய அரபு அமீரகம் திடீரென மறுப்பு தெரிவித்திருக்கிறது.

இந்தியாவிற்கான அமீரகத்தின் தூதர் அகமது அல்பானா கூறுகையில் “கேரள வெள்ள நிவாரணத்திற்காக நாங்கள் 700 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குகிறோம் என்று கூறவில்லை. அது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

மேலும் வெள்ள சேதாரத்திற்கான மதிப்பீட்டைத் தான் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இச்செய்தியினை அறிந்த பாஜகவினர் கேரள அரசின் மீது தங்களின் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close