Central Government: இந்தியாவில் மத்திய - மாநில அரசுகளின் வேலைக்கான போட்டி தேர்வுகள் முதல் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் வரை என பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளுக்கு பயிற்றுவிக்கும் பயிற்சி மையங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுபோக, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் என எண்ணில் அடங்காத பயிற்சி மையங்கள் உருவெடுத்துள்ளன.
இந்த பயிற்சி மையங்களில் சிலவற்றில் கொடுக்கப்படும் அதிகப்படியான அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வடமாநிலங்களில் பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களின் தற்கொலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தான், பயிற்சி மையங்களின் தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்கான வரைவு வழிகாட்டுதல்களை மத்திய அரசு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, எந்தவொரு பயிற்சி மையமும் 100 சதவீத தேர்ச்சி அல்லது 100 சதவீத வேலை உத்தரவாதம் உட்பட போலியான உத்தரவாதங்களை அளிக்க கூடாது என்கிற அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்ட பயிற்சித் துறையில் தவறான விளம்பரங்களைத் தடுப்பது என்ற தலைப்பில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தால் (CCPA) வரைவு செய்யப்பட்ட வழிகாட்டுதல்கள், 30 நாட்களுக்குள் பொதுமக்களின் கருத்தைப் பெற உள்ளன.
அந்த வழிகாட்டுதல்களில், பயிற்சி மையங்களின் தவறான விளம்பரங்களை உள்ளடக்கிய பல்வேறு அளவுருக்கள் உள்ளன என்று கூறியுள்ளது. அவை பாடத்தின் பெயர் (இலவசமாகவோ அல்லது கட்டணமாகவோ) மற்றும் வெற்றிகரமான விண்ணப்பதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடநெறியின் கால அளவு தொடர்பான முக்கியமான தகவல்களை மறைத்தல், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களை வழங்காமல் வெற்றி விகிதங்கள், தேர்வுகள் அல்லது தரவரிசைகள் குறித்து தவறான கூற்றுக்கள் மற்றும் மாணவர்களின் வெற்றியை தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துவது போன்றவை ஆகும் என்றும் குறிப்பிட்டது.
மேலும், பயிற்சி அளிக்கும் எந்தவொரு மையமும், வெற்றிகரமான விண்ணப்பதாரர்களின் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல், வெற்றிகரமான விண்ணப்பதாரர்களின் பெயர்கள், புகைப்படங்கள், சான்றுகள் அல்லது வீடியோக்களை விளம்பரத்தில் பயன்படுத்த கூடாது அல்லது பயிற்சியில் சேர்வது மாணவருக்கு ரேங்க், அதிக மதிப்பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று நம்ப வைக்க கூடாது. தற்காலிக அல்லது நிரந்தர வேலை, நிறுவனங்களில் சேர்க்கை, வேலை உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைக் குறிப்பிடக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரைவைத் தயாரிப்பதற்கு முன், பயிற்சித் துறையில் தவறான விளம்பரம் குறித்த பிரச்சினையை விவாதிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் டிசம்பர் 8, 2023 அன்று ஒரு குழுவை அமைத்தது. இது ஜனவரி 8, 2024 அன்று பயிற்சி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோசனையையும் கேட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Draft govt rules on coaching centre ads: No false claims of 100% selection
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“