அணைகள் மறுசீரமைப்பு பணிகள் : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அதில், நாட்டில் உள்ள அனைத்து அணைகள் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.3,466 கோடியில் பணிகளை தொடங்க திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஜார்க்கண்ட் உட்பட ஏழு மாநிலங்களில் உள்ள 198 அணைகளின் பராமரிப்பு பணிகள் இந்த நிதியைக் கொண்டு மேம்படுத்த உள்ளதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
அணைகள் மறுசீரமைப்பு பணிகள் : தென்னிந்தியாவிற்கான நிதி
தென்னிந்தியாவில் இருக்கும் மாநிலங்களின் அணைகளை சீரமைக்க ரூபாய் 1, 898 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை பொறுப்பில் உள்ள 89 அணைகளுக்கு 803 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளன.
360 கோடி ரூபாயினை கேரளாவில் உள்ள 16 அணைகளை சீரமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு, 735 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறது அக்குழு.
2020ம் ஆண்டிற்குள் முடிவடைய இருக்கும் இத்திடங்களுக்கான நிதியாக 3, 466 கோடியை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. இதில் உலக வங்கியில் வாங்கிய 2,628 கோடியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்கள் 747 கோடி ரூபாயையும், மத்திய நீர்வள ஆணையம் 91 கோடி ரூபாயையும் வழங்க உள்ளது.