கடந்த சில மாதங்களாக, நாட்டின் பல வட்டங்களில் உள்ள அனைத்து மொபைல் சந்தாதாரர்களின் அழைப்பு தரவு பதிவுகளை (call data records) இந்திய அரசு நாடியுள்ளது. இந்த செயல், நாட்டு மக்களின் தனியுரிமை பற்றிய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறுவதாக உள்ளது. தொலைதொடர்பு ஆபரேட்டர்களுக்கு, இந்த அசாதாரண கோரிக்கை மத்திய தொலைத்தொடர்பு துறையின் (டிஓடி) உள்ளூர் பிரிவு அலுவலகம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி, ஆந்திரா, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கேரளா, ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய வட்டங்களில் இருக்கும் அனைத்து தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் பதிவுகளும் கோரப்பட்டுள்ளன.
"இது போன்ற கோரிக்கைகள் பல மாதங்களாக நடைமுறையில் இருந்தாலும், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில், வெகுஜன மக்கள் தொடர்பான கோரிக்கைகளை நாங்கள் காணத் தொடங்கினோம்," என்று ஒரு தொலைத்தொடர்பு ஆபரேட்டரின் மூத்த நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழிடம் கூறினார்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பான இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் "அரசின் இதுபோன்ற கோரிக்கைகள் அபாயகரமானது" என்று பிப்ரவரி 12 ம் தேதி இந்திய தொலைத்தொடர்புத் துறையின் செயலாளர் அன்ஷு பிரகாஷுக்கு புகார் அளித்தது.
அந்த புகாரில், "குறிப்பிட்ட வட்டங்களில் உள்ள அனைத்து சந்தாதரகளின் சி.டி.ஆர் கோரிக்கை வைப்பது ஒட்டுமொத்த கண்காணிப்புக்கு வழிவகுக்கும். குறிப்பாக டெல்லி போன்ற ஒரு மாநிலத்தில் ஏராளமான வி.வி.ஐ.பி மண்டலங்கள் உள்ளன. அமைச்சர்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள் போன்றோரின் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளும் இதில் அடங்கும் " என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி 2, 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் டெல்லி வட்டத்தில் இருக்கும் 53 மில்லியன் சந்தாதாரர்களின் அழைப்பு தரவு பதிவுகளை இந்திய தொலைத்தொடர்புத் துறை கோரியிருக்கிறது. அந்த நேரத்தில் தான், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. டெல்லி தேர்தலுக்கான பிரச்சாரம் கூட பிப்ரவரி 6 ஆம் தேதி தான் முடிவடைந்தன. இரண்டு நாட்களுக்கு பின்னர் தேர்தல்கள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதுதொடர்பாக செயலாளர் அன்ஷு பிரகாஷுக்கு மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் செய்தியை அனுப்பியது, ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.
"எதற்காக இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம், நாங்கள் எந்த சந்தாதாரை குறிப்பிட்டு கண்காணிக்கிறோம்" போன்ற எந்தவொரு முறையான அறிவிப்பம், தொலைத் தொடர்புத் துறை அளித்த கோரிக்கையில் இல்லை என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபரேட்டர்களுடன், மத்திய தொலைத் தொடர்புத் துறை வைத்திருக்கும் உரிம ஒப்பந்தத்தின் பிரிவு 39.20 இன் கீழ், 'பாதுகாப்பு காரணங்கள்' தொடர்பான உரிமதாரரின் ஆய்வுக்காக (இந்திய தொலைத்தொடர்புத்துறை) ஆபரேட்டர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது சிடிஆர் மற்றும் ஐபிடிஆர் உள்ளிட்ட பதிவுகளை பாதுகாக்க வேண்டும். இந்த பதிவுகளைப் பொறுத்தவரை 'உரிமதாரர் அவ்வப்போது வழிமுறைகளை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு நெறிமுறையின் கீழ், சட்ட அமலாக்க முகமை குறிப்பிட்ட கோரிக்கைகள் மூலம் மொபைல் ஆபரேட்டர்களிடம் இருக்கும் சி.டி.ஆர் பதிவுகளை வினவலாம்.
2013 ஆம் ஆண்டில்,மாநிலங்களவையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி உட்பட பல அரசியல்வாதிகளின் சி.டி.ஆர் பதிவுகளை அங்கீகரிக்கப்படாத வகையில் அணுகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக, அப்போதைய யுபிஏ அரசாங்கம் அழைப்பு பதிவுகளைப் பெறுவதற்கான நெறிமுறைகளை கடுமையாக்கியது .
ஆங்கிலத்தில் படிக்க: Cellphone operators red-flag ‘surveillance’ after Govt wants call records of all users
அதே ஆண்டு வெளியிடப்பட்ட புதிய நெறிமுறையின் கீழ், உள்துறை செயலாளரிடம் அனுமதி வாங்கிய பின்னர், காவல்துறை கண்காணிப்பாளர் (அ)அதற்கு மேற்பட்டபதவியில் இருப்பவர்கள் மட்டுமே தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு இதுபோன்ற கோரிக்கையை முன்வைக்க முடியும்.
தற்போதைய கோரிக்கை இந்த வழிகாட்டுதல்களில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறது. இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) முன்னாள் தலைவர் கூறுகையில்“இது மிகவும் அசாதாரணமானது. சிடிஆர் விவரங்களைக் கேட்க, ஒரு குரிபிட்டக் காரணம் இருக்க வேண்டும். காரணத்தை விளக்காமல் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மிகவும் தன்னிச்சையானது மற்றும் தனியுரிமையை மீறும் செயல்" என்றார்.
அவர்கள் ஒரு குறிப்பிட்ட நபரின் தரவை மட்டும் கேட்கவில்லை, மாறாக ஒரு பிராந்தியத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் தரவையும் கொடுங்கள் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். இது நெறிமுறையை தெளிவாக மீறுவதாகும்,”என்று ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மூத்த நிர்வாகி கூறினார். அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு ஆபரேட்டர்கள் இணங்குகிறார்களா என்று கேட்டபோது,"எங்களுக்கு வேறு வழி இல்லை" என்றும் அந்த நிர்வாகி பதிலளித்தார்.
செயலாளர் அன்ஷு பிரகாஷுக்கு எழுதிய குறிப்பில், தொலைத் த ஹோடர்புத் துறையின் உள்ளூர் பிரிவு அலுவலகம் மாதாந்திர தேதிகள் அடிப்படையில் தரவுகளை கோரியுள்ளன: ஆந்திரா (மாதத்தின் 1 மற்றும் 5 நாட்கள்), டெல்லி (18 வது நாள்), ஹரியானா (21 வது நாள்), இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் (முந்தைய மாதத்தின் கடைசி நாள்), கேரளா மற்றும் ஒடிசா (15 வது நாள்), மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் (முந்தைய மாதத்தின் கடைசி நாள் மற்றும் நடப்பு மாதத்தின் முதல் நாள்).
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.