கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி ஜி.எஸ்.டி வரி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி மூலம் போதிய வருவாய் கிடைத்துள்ளதால் வரி விகிதங்களை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவாகிறது. தற்போதைய நிதியாண்டில் ஜிஎஸ்டி மூலம் 12 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருவாய் 13 லட்சம் கோடியை எட்டும் நிலையில் உள்ளது என மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அரசுக்கு தொடர்ந்து வரி வருவாய் அதிகரிக்கும் நிலையில், அதன் பயனை நுகர்வோருக்கு அளிக்கும் வகையில், வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட ஜூலை ஒன்றாம் தேதி ஜி.எஸ்.டி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் அமைச்சர் பியூஷ் கோயல், நிதி துறை இணை அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.