டாக்ஸி ஓருங்கிணைப்பாளர்களாக இருக்கும் ஓலா மற்றும் உபெர் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது. இந்த சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆன்ட்ராய்ட் போன்களில் குறைந்த கட்டணமும், ஐபோன்களில் அதிக கட்டணமும் நிர்ணயிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து, இந்த புகார்கள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு வந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Govt issues notice to Uber, Ola over differential fares for iPhone & Android users
இந்த நிலையில், மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று வியாழக்கிழமை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், இது குறித்து தனது துறை, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சி.சி.பி.ஏ) மூலம் இரு நிறுவனங்களுக்கும் பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
"வாடிக்கையாளர்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் பதிவு செய்வதில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படும் புகாரின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த நிறுவனங்களின் கட்டண அறிக்கைகள் தொடர்பாக, உபெர், ஓலா நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு, அமைச்சகம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது." என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.