உச்சநீதிமன்ற உத்தரவின்படி மே 14ம் தேதி காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்கப்படமாட்டாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தமிழத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துத் தீர்ப்பு கூறியது. மேலும் இதனை நடைமுறைப்படுத்தத் தமிழகத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வாரியம் அமைக்க மார்ச் 29 தேதியை இறுதி காலக்கெடுவாக அறிவித்த நிலையில், மத்திய அரசு இதனை இன்று வரை பின்பற்றவில்லை.
மேலும் இறுதி கெடு முடிவடையும் நேரத்தில், தீர்ப்பில் குறிப்பிட்ட ‘ஸ்கீம்’ வார்த்தை குறித்து விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்தபோது, தீர்ப்பைப் பின்பற்றாத மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்தது. பின்னர் மே 3ம் தேதிக்குள் காவிரி விவகாரத்தில் வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் 2வது காலக்கெடு முடிந்தும், வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படவில்லை. கர்நாடகா தேர்தல் வேலைகளில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் செயல்பட்டு வருவதால் ஒப்புதல் பெற இயலவில்லை எனவே கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த விளக்கத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து, மே மாதம் 4 டிஎம்சி நீரைத் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று உத்தரவு அளித்தது. இருப்பினும், ‘சட்டம் , ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதற்காக காவிரி விவகாரத்தில் முடிவெடுக்க முடியவில்லை. கர்நாடக தேர்தலால் காவிரி திட்ட விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளோம்’ என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து தமிழக அரசு, ‘சட்டம், ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி தீர்ப்பை அமல்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொல்வதெல்லாம் ஒரு பதிலா? மத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டு காவிரி நீர் கூட எங்களுக்கு கிடையாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாதவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும்” மிகக் காட்டமாக வாதிட்டது.
இதைத் தொடர்ந்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “ 14ம் தேதி காவிரி சட்ட வரைவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி.சிங், காவிரி வரைவு திட்டம், வருகிற 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என உறுதிபடக் கூறியிருக்கிறார். மேலும், வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படுவது குறித்து கால அவகாசம் கோரப்படாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.