இந்தியாவில் ஒமிக்ரான் மாறுபாடு காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ கட்டமைப்பு பலப்படுத்த மத்திய அரசு ஒதுக்கிய 23,123 கோடி ரூபாயில் வெறும் 17 விழுக்காடு தான் மாநிலங்கள் பயன்படுத்தியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய அவர், " மற்ற நாடுகளில் முந்தைய அலையின் போது ஏற்பட்ட பாதிப்பை விட, 3 அல்லது 4 மடங்கு பாதிப்பை சந்தித்துள்ளனர். எனவே, இந்தியாவில் வரவிருக்கும் அதிகப்படியான பாதிப்பு எண்ணிக்கை, சுகாதார கட்டமைப்பு தகர்த்திட வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவ கட்டமைப்பு வலுப்படுத்தும் பணியில் மாநிலங்கள் களமிறங்க வேண்டும்.
ஐசியூ படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், குழந்தைகளுக்கான ICU/HDU படுக்கைகள் ஆகியவற்றின் பணிகளை விரைவுபடுத்துமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல், இதில், திறன் மேம்பாடு, ஆம்புலன்ஸ்கள் சரியான நேரத்தில் கிடைப்பது, கொரோனா தனிமைப்படுத்தல் மையம் உருவாக்குதல், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணித்தல் ஆகியவற்றுக்கு தகவல் தொழில்நுட்ப கருவிகளை திறம்பட பயன்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மத்திய அமைச்சரவை ரூ.23,123 கோடிக்கான Emergency Covid-19 Response Package II (ECRP-II) க்கு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின்படி, 23,056 ICU படுக்கைகளை உருவாக்கும் திட்டத்திற்கு மையம் ஒப்புதல் அளித்தது.
அதாவது, உத்தரப் பிரதேசம் (4,007), கர்நாடகா (3,021), மகாராஷ்டிரா (2,970), மேற்கு வங்கம் (1,874), தமிழ்நாடு (1,583), மத்தியப் பிரதேசம் (1,138), மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்கள் தலா 1,000 படுக்கைகளை அமைக்க வேண்டும்.
குறிப்பிடத்தக்க வகையில், கிராம மட்டம் வரை மூன்றடுக்கு சுகாதார சேவையை அதிகரிக்க அமைக்கப்பட உள்ள 75,218 படுக்கைகளில் 60 சதவீதத்தை ஆறு மாநிலங்கள் பெறுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், இரண்டாம் நிலை சுகாதார மையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் 5,000க்கும் மேற்பட்ட படுக்கைகளை மாநிலங்கள் பெறுகின்றன. உத்தரப் பிரதேசம் (11,770), பீகார் (9,920), ஆந்திரப் பிரதேசம் (9,596), ஒடிசா (8,206), அசாம் (7,320), மற்றும் ஜார்கண்ட் (5,798) ஆகும்.
டிசம்பர் 15 அன்று, மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிப்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தின் போது, 1,374 மருத்துவமனைகளில் 958 திரவ மருத்துவ ஆக்சிஜன் சேமிப்பு டேங்க் மற்றும் மருத்துவ கேஸ் பைப்லைன் சிஸ்டம் நிறுவுவதற்கு ECRP-II நிதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு தெரிவித்திருந்தார். மேலும், இத்திட்டத்தின் கீழ் 14,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன
மேலும் பேசிய மாண்டவியா, சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கப்படவுள்ளதால், பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அமைப்புடன் இணைந்துவிடுவதை தவிர்த்திட தனி தளங்கள், தனி வரிசை, தனி தடுப்பூசி குழு பணியமர்த்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil