யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) 45 பணியிடங்களை "லேட்டரல் என்ட்ரி" மூலம் நிரப்புவதற்கான விளம்பரம் அரசியல் சர்ச்சையைத் தூண்டியதைத் தொடர்ந்து, அதை ரத்து செய்யுமாறு மத்திய அரசு செவ்வாய்கிழமை யு.பி.எஸ்.சி.,யிடம் கேட்டுக் கொண்டது.
ஆங்கிலத்தில் படிக்க: Amid political row, Centre asks UPSC to cancel ad for ‘lateral entry’ recruitment to 45 posts
யு.பி.எஸ்.சி தலைவி ப்ரீத்தி சுதனுக்கு, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதிய கடிதத்தில், “அரசுப் பணிகளில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியானவர்கள் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற, சமூக நீதிக்கான அரசியலமைப்பு ஆணையை நிலைநிறுத்துவது முக்கியம்.”
"இந்தப் பணியிடங்கள் சிறப்புப் பணிகளாகக் கருதப்பட்டு, ஒற்றைப் பணியாளர் பதவிகளாக நியமிக்கப்பட்டுள்ளதால், இந்த நியமனங்களில் இடஒதுக்கீட்டிற்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை" என்று ஜிதேந்திர சிங் கடிதத்தில் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடிஜி எப்போதும் சமூக நீதியை உறுதியாக நம்புகிறார். அவரது திட்டங்கள் நமது சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலனை மேம்படுத்தியுள்ளன. இடஒதுக்கீட்டின் கொள்கைகளுடன் லேட்டரல் என்ட்ரியை சீரமைக்கும் முடிவு, சமூக நீதிக்கான பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
“சமூக நீதியை உறுதி செய்வதில் பிரதமர் கவனம் செலுத்தும் சூழலில் இந்த அம்சம் மறுபரிசீலனை செய்யப்பட்டு சீர்திருத்தப்பட வேண்டும்” என்று ஜிதேந்திர சிங் கூறினார். “எனவே, 17.8.2024 அன்று வெளியிடப்பட்ட லேட்டரல் என்ட்ரி ஆட்சேர்ப்புக்கான விளம்பரத்தை ரத்து செய்யுமாறு யு.பி.எஸ்.சி.,யை நான் வலியுறுத்துகிறேன். இந்த நடவடிக்கையானது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும்” என்று ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17 அன்று, யு.பி.எஸ்.சி 24 மத்திய அமைச்சகங்களில் இணைச் செயலர், இயக்குநர் மற்றும் துணைச் செயலர் பதவிகளுக்கு "திறமையான மற்றும் ஊக்கமளிக்கும் இந்திய குடிமக்களுக்கான நேரடி நியமன ஆட்சேர்ப்புக்கான" விண்ணப்பங்களை கோரி ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.
இந்த விளம்பரம் எதிர்க்கட்சிகள் மற்றும் பா.ஜ.க.,வின் முக்கிய கூட்டணி கட்சிகளான ஜே.டி.யு (JD(U)) மற்றும் லோக் ஜன சக்தி (LJP) ஆகிய கட்சிகள் இந்த நடவடிக்கையை எதிர்த்ததால் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
திங்களன்று, யு.பி.எஸ்.சி ஆட்சேர்ப்பு விளம்பரம் தொடர்பாக நரேந்திர மோடி அரசாங்கத்தின் மீதான தாக்குதலை காங்கிரஸ் தொடர்ந்தது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இது "தலித்துகள், ஓ.பி.சி.,க்கள் மற்றும் பழங்குடிகள் மீதான தாக்குதல்" என்று கூறினார்.
யு.பி.எஸ்.சி முடிவு தொடர்பாக பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) ஆகியவை இந்த நடவடிக்கையை எதிர்த்தன, தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்தது, அதிகாரத்துவத்தில் லேட்டரல் என்ட்ரி "சாதாரண குடிமக்களுக்கு நிர்வாகத்தின் தரத்தையும் சேவைகளை வழங்குவதையும் மேம்படுத்தும்" என்று கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.