இ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருள்கள் விநியோகம் செய்வதற்கு தற்போதுள்ள முடக்கநிலை அமல் காலத்தில் தடை நீடிக்கும் என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவில் பொதுமுடக்கம் மே 3 வரை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏப்ரல் 14ம் தேதி அறிவித்தார். மேலும், நாட்டில் அடையாளம் காணப்படும் சில பகுதிகளில் மட்டும், ஏப்ரல் 20ஆம் தேதியில் இருந்து, குறிப்பிட்ட சில செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
முடக்கநிலை அமல் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 14, 2020 தேதியிட்ட ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.
மேலும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மாவட்ட நிர்வாகங்களால், நோய்த்தடுப்புக்கான மண்டலங்கள் என எல்லை குறிக்கப்படாத பகுதிகளில் சில கூடுதல் செயல்பாடுகளை அனுமதிப்பதற்கு, ஏப்ரல் 15, 2020 தேதியிட்டு மற்றொரு உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது.
ஏப்ரல் 15, 2020 தேதியிட்ட உத்தரவுடன் சேர்த்து, தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்களையும் மத்திய உள்துறை அமைச்சகம வெளியிட்டது. நாடு முழுக்க தடை செய்யப்பட்ட செயல்பாடுகளை பிரித்துக்காட்டி, நோய்த்தடுப்பு மண்டலத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள், மற்ற பகுதிகளில்அனுமதிக்கப்படும் சில செயல்பாடுகள் பற்றி அதில் விவரிக்கப்பட்டது.
இந்த தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்களை, நாளையில் இருந்து (ஏப்ரல் 20) முதல் கடைபிடிக்கப்பட வேண்டும்.
இந்த தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்களில், கட்டுப்பாடற்ற மண்டலங்களில் (ஹாட்ஸ்பாட் அல்லாத மாவட்டங்கள், மற்றும் பசுமை மண்டல மாவட்டங்கள்) இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளை முழுமையாகத் தொடங்க அனுமதிக்கப்படும் என்றும், நுழைவுச் சீட்டின் அடிப்படையில் அவற்றின் விநியோக வாகனங்களை இயக்கலாம் என்று கூறப்பட்டிருந்தன.
இதன்மூலம், அத்தியாவசியம் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை கையாள்வதற்கான வாய்ப்புகள் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு கிடைத்தன.
ஆங்கிலத்தில் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா இன்று கையெழுத்திட்ட புதிய உத்தரவில், “உள்துறை அமைச்சக ஆணை எண் 40-3 / 2020-டி.எம்- I(A) 2020 ஏப்ரல் 15, 16 2020 தேதியிட்டதும் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 10 (2) (எல்) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி தேசிய செயற்குழுத் தலைவர் என்ற வகையில், ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களிலிருந்து "இ-காமர்ஸ் நிறுவனங்களின்" செயல்பாட்டை அனுமதிக்கும் துணைப் பிரிவு நீக்குவதற்கு ஆணையிடுகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், நாளை முதல் இ காமர்ஸ் ஆபரேட்டர்கள் வெறும் அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்கும் சூழல் உருவாகியுள்ளது.