மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தவர்களை மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தவர்களாக கருதமுடியும். அதேபோல் ஆர்.டி.பி.சி.ஆர், ரேப்பிட் டெஸ்ட், மாலிகூலர் சோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் கொரோனா சோதனைக்குப் பின் அது மருத்துவர் மூலமாக உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றிருக்க வேண்டும். மருத்துவமனையிலோ, வீட்டிலோ உயிரிழந்ததற்கான அரசு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தால்தான் அதனை கொரோனா மரணமாக ஏற்க முடியும் என்று விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ ரீதியாக கொரோனா உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மருத்துவமனையிலோ அல்லது மருத்துவமனைக்கு வெளியிலோ நிகழும் மரணங்கள் கொரோனா உயிரிழப்புகளாக கருதப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இவை தவிர கொரோனா பாதித்து சிகிச்சை மையத்திலோ அல்லது வீட்டிலோ உயிரிழந்தால் அதற்கான இறப்பு சான்றிதழை வழங்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969-ன் பிரிவு 10-ன் கீழ் தேவைக்கேற்ப பதிவு அதிகாரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது கொரோனா மரணமாக கருதப்படும்.
தொற்றுக்கு பின் தற்கொலை, கொலை, விபத்து போன்றவற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் அவை கொரோனா மரணங்களாக கருதப்படாது என வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் ரீபக் கன்சால், கவுரவ் பன்சால் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களை வழங்குவதற்கான எளிமையான வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு உத்தரவிட்டது.
செப்டம்பர் 3ஆம் தேதி நடந்த விசாரணையில், இறப்புக்கான சரியான காரணத்தைக் குறிப்பிடும் இறப்புச் சான்றிதழ்கள்/ அதிகாரப்பூர்வ ஆவணங்களை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை எளிதாக்க ஜூன் 30 அன்று உத்தரவு பிறப்பித்திருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 'கொரோனா காரணமாக மரணம் ', என சான்றிதழில் இருந்தால் நலத்திட்டங்களை எளிதாக பெறலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
வழிகாட்டுதல்களின்படி, நகராட்சியால் கொடுக்கப்பட்ட இறப்பு சான்றிதழில் குடும்ப உறுப்பினர்கள் திருப்தி அடையவில்லை என்றால், மாநிலம் அல்லது யூனியன் பிரதேசங்கள் இந்த விவகாரத்தில் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பாட நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.
இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம், கொரோனாவால் இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இறப்புக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்குவதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதிகாரப்பூர்வ ஆவணம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil