நீட் இளநிலை தேர்வை மீண்டும் நடத்த விருப்பம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் பிரமானப் பத்திரம் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, அதை முற்றிலுமாக ரத்து செய்தால், இந்த ஆண்டு தேர்வெழுதிய லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Centre not in favour of NEET-UG retest, tells SC scrapping exam jeopardises honest students
மத்திய கல்வி அமைச்சகம், உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், நீட் இளநிலை தேர்வு நடத்தும் போது முறைகேடுகள், ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம், முறைகேடுகள் நடந்ததாக ஒப்புக்கொண்டுள்ளது. வினாத்தாள் கசிவு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தியாவில் நடத்தப்படும் தேர்வில் பெரிய அளவிலான ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், முழு தேர்வையும் ரத்து செய்வது நியாயமானதாக இருக்காது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
“எந்தவொரு தேர்விலும், நியாயமற்ற வழிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்வெழுதிய அதிக எண்ணிக்கையிலான மாணவர்களின் நலன்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட போட்டி உரிமைகள் உள்ளன. தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வது, 2024-ம் ஆண்டில் வினாத்தாளுக்கு பதிலளித்த லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்களை கடுமையாக பாதிக்கும்” என்று மத்திய கல்வி அமைச்சகத்தின் பிரமாணப் பத்திரம் கூறுகிறது.
24 லட்சம் தேர்வர்களுக்கு நீட்-யுஜி மறுதேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை முன்வைப்பது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தார்மீக பொறுப்பேற்றார். ஆனால், மறுதேர்வு நடத்துவது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை.
நீட் இளநிலை தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட மனுக்களை மே 5-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ள நிலையில் இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பீகார் அரசாங்கம், கல்வி அமைச்சகத்திடம் அளித்த தகவல்தொடர்புகளில், அதன் விசாரணையில், “வினாத்தாள் கசிவைத் தெளிவாகக் காட்டுகிறது” என்று கூறியிருந்தபோதும் மத்திய அரசின் இந்த பிரமானப் பத்திரம் வந்துள்ளது. பீகாரின் பொருளாதார குற்றப்பிரிவு (இ.ஓ.யு), அதன் விசாரணையின் போது, 68 கேள்விகள் (மதிப்பீடு செய்யப்பட்ட 200) வினாத்தாளின் எரிந்த எச்சங்களில் இருந்து பெறப்பட்ட அசல் வினாத்தாளின் புகைப்பட நகலுடன் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) பகிர்ந்து கொண்ட அசல் கேள்வியுடன் பொருந்தியதாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் இளைநிலைத் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்ததாக பீகார் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் முடிவு செய்தது.
மே 4-ம் தேதி நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் கசிவு சாத்தியம் குறித்து பீகார் காவல்துறைக்கு ஜார்கண்ட் காவல்துறை முதலில் எச்சரிக்கை விடுத்தது. பாட்னா காவல்துறை விரைவாக பதிலளித்தது. ஆனால், முதலில் சந்தேக நபர்களின் இருப்பிடங்களைக் கண்டறிய சிரமப்பட்டது.
மறுநாள் பீகாரில் 27 மையங்களில் தேர்வு நடந்தது. மே 5 பிற்பகலில், ராஜ்பன்ஷி நகரில் உள்ள ஒரு வீட்டில் சில சந்தேக நபர்கள் கூடியிருப்பதாக சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்தன. மூன்று குழுக்கள் குவிக்கப்பட்டன: ஒரு குழு வீட்டில் சோதனை செய்து எரிந்த வினாத்தாள்களை பறிமுதல் செய்தது; மற்றொரு குழு உள்ளூர் தேர்வு மையத்திற்குச் சென்று ஒரு தேர்வாளரையும் அவரது தந்தையையும் கைது செய்தது; மூன்றாவது குழு முக்கிய சந்தேக நபரான ஜூனியர் இன்ஜினியர் யாதவேந்துவை தேடினர்.
யாதவேந்துவிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, நிதீஷ் மற்றும் அமித் உட்பட மேலும் 3 தேர்வர்களையும் நான்கு ‘செட்டர்களையும்’ போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட 13 பேரின் வாக்குமூலங்களையும் சப்-இன்ஸ்பெக்டர் தேஜ் நாராயண் சிங் மே 5-ம் தேதியே பதிவு செய்தார்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் வேண்டுகோளின் பேரில், மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) நீட் இளநிலை வினாத்தாள் கசிவு பற்றிய குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை எடுத்துக் கொண்டது. பீகாரின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதன் அனைத்து ஆதாரங்களையும் வழக்கு நாட்குறிப்புகளையும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.