ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு கூடுதலாக 100 துணை ராணுவப் படையை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதி யாசின் மாலிக் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புகளின் தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. 35A பிரிவு (நிரந்தர குடியுரிமை வழங்கும் பிரிவு) குறித்த விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் திங்களன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ள சூழ்நிலையில், அதற்கு முன்னதாகவே இவர்கள் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (பிப்.22) மாலை, மாலிக்கை அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார், தற்போது கோதி பாத் காவல் நிலையத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சையத் அலி ஷா கிலானி மற்றும் மிர்வாயிஸ் உமர் ஃபரூக் ஆகியோரின் பிரிவுகளில் மாலிக் அங்கம் வகித்து வருகிறார்.
இதுகுறித்து ஜமாத்-இ-இஸ்லாமி(JeI) இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அமைப்பின் தலைவர் ஹமித் ஃபயஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கடைசி 24 மணி நேரத்தில் ஹர்ரியட்(மற்றொரு காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பு) தலைவர்கள் மற்றும் ஜமாத் பணியாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மட்டும் இதுபோன்ற நியாயமற்ற நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. முறையான எந்த காரணத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை நியாயப்படுத்த முடியுமா? நீங்கள் ஒருவரை எளிதில் சிறைப்படுத்திவிடலாம், ஆனால் அவர்களது சிந்தனைகளை சிறைப்படுத்த முடியாது.
பிப்.22 மற்றும் 23 இரவுக்கு இடைப்பட்ட நேரத்தில், காவல்துறை மற்றும் இதர கம்பெனிகள் அதிகளவில் இறக்கப்பட்டு, மாபெரும் கைது நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
35(A) பிரிவு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இதனால் தான் அதிக அளவிலான கைது நடவடிக்கைகள் நடைபெறுகிறது. ஜமா இயக்கத்தைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திரைமறைவுக்கு பின்னால் சில மர்மங்கள் மறைந்திருப்பதாக நினைக்கிறேன்" என்று தெரிவித்து இருக்கிறார்.
18 ஹர்ரியட் தலைவர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் 150க்கும் மேற்பட்டோர், 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தவிர்த்து, மேலும் 1000 வீரர்கள் பாதுகாப்பு பணிகளுக்குத் தேவை என்று மாநில அரசு, மத்திய அரசிடம் கோரியுள்ளது. அரசின் இந்த முடிவை முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.