இரவு நேர ஊரடங்கை செயல்படுத்துங்கள்… ஒமிக்ரான் அச்சுறுத்தலால் மாநிலங்களுக்கு எச்சரிக்கை

இரவு நேர ஊரடங்கு, திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் எண்ணிக்கையை குறைத்தல், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் மாறுபாடு டெல்டாவை காட்டிலும் மூன்று மடங்கு அதிவேகமாக பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று பரவல் அதிகமுள்ள உள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு, மக்கள் அதிகளவில் ஒன்றுக்கூட தடை, கட்டுப்பாடு பகுதிகள் போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், தொற்று பரவல் மற்றும் தீவிரத்தன்மையை பகுப்பாய்வு செய்திட வார் ரூம் தொடங்கிடவும் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், தொற்று பரவலை குறிப்பிட்ட பகுதிகளில் ஆரம்பித்துல கண்டறிந்து, தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 200ஐ தாண்டியதையடுத்து, மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். புள்ளிவிவரங்களின்படி, ஏழு மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு இரட்டை டிஜிட்களில் உள்ளன.

மாவட்ட அளவில் கட்டுப்பாடு தேவை

பூஷன் எழுதிய கடிதத்தில், ” மாவட்ட அளவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் இருப்பிடங்களை கண்காணிப்பது, மருத்துவமனை உள்கட்டமைப்பு அதன் பயன்பாடு, கட்டுப்பாட்டு மண்டலங்கள் போன்றவற்றின் தரவுகளை தொடர்ந்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். தரவு முடிவுகள் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த செயல்முறை மூலம், மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு தொற்று பரவுவதற்கு முன்பே மாவட்ட அளவில் அதனை கட்டுப்படுத்திட முடியும்.

கடந்த ஒரு வாரத்தில் , மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு விகிதம் 10 விழுக்காடு அல்லது மருத்துவமனையில் அனுமதித்தல் 40 விழுக்காடு அல்லது ஆக்சிஜன் சப்போர்டில் அதிக பேர் அல்லது ஐசியூவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் அனுமதிக்கப்படும் சூழ்நிலை வந்தால், அதனை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் இரவு நேர ஊரடங்கு

இரவு நேர ஊரடங்கு, மக்கள் அதிகளவில் கூடுகையில் கடுமையான கட்டுப்பாடுகள், திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் எண்ணிக்கையை குறைத்தல், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல்” உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில், அப்பகுதியை கட்டுப்பாட்டு பகுதியாக உடனடியாக அறிவிக்க வேண்டும். கொரோனா உறுதியான அனைவரது மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்பட வேண்டும்.

ஒமிக்ரான் மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக பரவும் என்பதால், மாவட்ட அளவில் மிகவும் விரைவாகவும் கவனமாகவும் முடிவுகளை எடுத்தாக வேண்டும். ஒமிக்ரான் மட்டுமின்றி டெல்டாவும் நாட்டில் பல இடங்களில் இருப்பதால், அதிக தொலைநோக்கு பார்வை, தரவு பகுப்பாய்வு, ஆற்றல்மிக்க முடிவெடுத்தல் மற்றும் உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் கடுமையான மற்றும் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது.

கண்காணிப்பு, சோதனையை அதிகப்படுத்துங்கள்

அதே போல், மாவட்டத்தில் வீடு வீடாக சென்று சோதிக்கும் வகையில் கண்காணிப்பை அதிகரியுங்கள். அப்போது யாருக்காவது சுவாச பிரச்சினை, காய்ச்சல், கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். தொற்று உறுதியாகும் பட்சத்தில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய வேண்டும்.

வீட்டு தனிமையில் கவனம் வேண்டும்

வைரசின் அதிக பரவலை கருத்தில் கொண்டு, கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்பட்டிருக்கும் நபர்கள், மற்றவர்களுக்கு பரவாத வகையில் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்.

தேசிய சராசரியை விட முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்திய எண்ணிக்கை குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். வீட்டுக்கு வீடு தடுப்பூசி பிரச்சாரம் வலுப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Centre warns states on omicron activate war rooms and curfew if needed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com