சைத்ரா தெரஸா ஐ.பி.எஸ்: இவர் செய்தது சரியா? கேரள விவாதம் இதுதான்…

பெண் அதிகாரி சைத்ரா மீது எந்தத் தவறும் இல்லை என்று கேரள டி.ஜி.பி லோக்நாத் போக்ராவிடம் அறிக்கை அளித்தார்.

By: January 30, 2019, 2:28:06 PM

‘அரசியல்வாதிகளுக்கு போதுமான மரியாதை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இது எல்லா நேரங்களிலும் கிடைப்பதில்லை’- இப்படிச் சொன்னவர் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

ஐ.பி.எஸ். அதிகாரி சைத்ரா தெரெஸா ஜான், கடந்த வாரம் திருவனந்தபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சோதனை நடத்தியது சர்ச்சையைக் கிளப்பியது. சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இருவரை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி காவலர்கள் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர்களை உடனடியாக சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், இந்திய ஜனநாயக சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அந்த காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களின் கோரிக்கையை போலிஸார் நிராகரிக்கவே, கோபமடைந்த சிலர், காவல் நிலையத்தின் மீது கல் வீசி விட்டு தப்பியோடினர்.

அப்படி தப்பியோடிய கலகக்காரர்களில் சிலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சோதனை நடத்தினார் துணை ஆணையர் சைத்ரா தெரெஸா ஜான். இருப்பினும் அங்கு யாரையும் அவரால் கண்டறிய முடியவில்லை. பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டார் சைத்ரா.

சைத்ரா இடமாற்றத்தை கேரள எதிர் கட்சியான காங்கிரஸ் விமர்சித்தது. இந்த சோதனையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசிய பினராயி, “அந்த காவல்நிலையத்தின் பொறுப்பாளர் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இருவரையும் பார்க்க, ஜனநாயக சங்கத்தினருக்கு அனுமதி மறுத்துவிட்டார். அதனால் கோபமடைந்தவர்கள் கற்களை காவல்நிலையத்தின் மீது வீசி விட்டு தப்பியோடியுள்ளனர். இதனால் காவல் நிலையத்தின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன” என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், கட்சி அலுவலகத்தை, ஐ.பி.எஸ் அதிகாரி சைத்ரா சோதனையிட்டதை ஒப்புக்கொண்டார். இருப்பினும், ‘இதுவரை எந்த அரசியல் கட்சியின் அலுவலகமும் இவ்வாறான சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. ஜனநாயக சமூகத்தில், ஒரு அரசியல் கட்சி சுதந்திரமாக வேலை செய்வது அடிப்படையான ஒன்று. பொதுவாக அனைத்து விசாரணைகளுக்கும் இம்மாநில அரசியல்வாதிகள் நன்கு ஒத்துழைக்கிறார்கள். ஜனநாயகம் சீராக செயல்பட வேண்டும் என்பதற்காக கட்சியின் அதிகாரிகள் தடைகளை தகர்த்து பணியாற்ற வேண்டும்’ என்று கூறிய முதல்வர் பினராயி, அரசியல் கட்சியின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் கடமை என்றார்.

அரசியல்வாதிகள் மீது எதிர்மறை கருத்தைப் பரப்பியதாக, துணை ஆணையர் சைத்ரா மீது குற்றம் சாட்டினார். அரசியல்வாதிகளின் வெளிச்சம் மங்கிப் போக, பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுவதாகக் கூறிய முதல்வர், அத்தகைய போக்குகளை தவிர்த்தால் மட்டுமே ஜனநாயக சமுதாயத்தை முன்னேற்ற முடியும் என்றார்.

சோதனை நடத்திய சைத்ரா மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, சி.பி.எம் மாவட்ட செயலாளரிடமிருந்து தனக்கு புகார் வந்திருப்பதாகவும் பினராயி கூறினார். முன்பாக இந்த விஷயம் குறித்து விசாரிக்க, கூடுதல் டி.ஜி.பி மனோஜ் ஆபிரகாம் நியமிக்கப்பட்டார். விசாரணை நடத்திய மனோஜ், பெண் அதிகாரி சைத்ரா மீது எந்தத் தவறும் இல்லை என்று கேரள டி.ஜி.பி லோக்நாத் போக்ராவிடம் அறிக்கை அளித்தார்.

இந்த சோதனையை தொடங்கும் முன் அனைத்து, வழிமுறைகளையும் அவர் பின்பற்றியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9-ம் தேதி நடந்த பாரத் பந்தின் போது, ஸ்டேட் பேங்க் மீது தாக்குதல் நடத்திய இடதுசாரி யூனியனைச் சேர்ந்த 8 அரசு ஊழியர்களை சைத்ரா சிறையிலடைத்ததும், அவர் இடமாற்றத்திற்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சர்ச்சையால், சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்த சைத்ரா தெரெஸா ஜான் தற்போது, பெண்கள் பிரிவு சூப்பிரண்டாக பணியமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Chaitra teresa john ips raided cpi m district office pinarayi vijayan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X