ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து, டெல்லியில் இன்று உண்ணா விரதத்தைத் தொடங்கினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதத்தைத் தொடங்கிய அவர், ஆந்திரவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை வலியுறுத்தி, நாளை ஜனாதிபதியை நேரில் சந்திக்கிறார்.
முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு, ஆந்திர பிரதேஷ் பவன் வளாகத்தில் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். இதில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆந்திர மாநில அரசு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
நேற்று குண்டூர் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரவுக்கான சிறப்பு அந்தஸ்து பற்றி வாய் திறக்காததால், மக்கள் அனைவரும் அவர் மேல் கடும் கோபத்தில் இருப்பதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருக்கிறார்.
தவிர, சந்திரபாபுவின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.