சிபிஐ-க்கு தடை: நாயுடு, மம்தா நடவடிக்கையில் அரசியலா?

முதன்மையான ஒரு விசாரணை அமைப்பை இப்படி ஒரு அரசாணை போட்டு ஒவ்வொரு மாநிலமும் தடை செய்துவிட முடியுமா?

Andhra CM Chandrababu Naidu Visits Anna Arivalayam
Andhra CM Chandrababu Naidu Visits Anna Arivalayam

ஆந்திர அரசிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு விசாரணக்காக ஆந்திராவிற்குள் நுழைய கூடாது என முதல்வர் சந்திரபாபு நாயுடு தடை விதித்துள்ளார். தமிழ்நாட்டில் சி.பி.ஐ.யும், வருமான வரித்துறையும் ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்களிடம் நடத்தும் சோதனை தான் நாயுடுகாருவை இப்படி தடா போடச் செய்ததா? என்கிற கேள்வியை பலரும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து, ஆந்திர சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. கடந்த தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.

பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் கடுமையாக குற்றஞ்சாட்டி வரும் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து, பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். விரைவில் மம்தா பானர்ஜியையும் சந்திக்கவுள்ளார்.

நவம்பர் 22ம் தேதி டெல்லியில் நடைபெறும் எதிர்க் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பா.ஜ.விற்கு எதிரான வலுவான கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்திற்கு காரணகர்த்தாவே சந்திரபாபு நாயுடு தான்.

இந்நிலையில் ஆந்திர அரசிடம் முன் கூட்டியே தகவல் தெரிவிக்காமல், வழக்கு விசாரணை தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் ஆந்திராவிற்குள் நுழைய தடை விதித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக நாட்டின் எந்த பகுதியிலும் நுழைந்து சோதனையிடவும், வழக்குகளை விசாரிக்கவும், சி.பி.ஐ.,க்கு அதிகாரம் உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் நுழைந்து சோதனையிடவும், வழக்கு குறித்து விசாரிக்கவும், சி.பி.ஐ., அதிகாரிகள், அந்தந்த மாநில அரசுகளிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத மாநில அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ., சோதனையிட, சம்பந்தபட்ட மாநில அரசிடம் முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற சோதனைகளுக்கு ஆட்சேபம் இல்லை என மாநில அரசுகள் தெரிவித்துவிடும். இதில் தான் நாயுடு ‘செக்’ வைத்துள்ளார்.

இனி ஆந்திராவில் மத்திய அரசு அலுவலகங்கள் தவிர வேறெங்கு சோதனை நடத்த வேண்டுமென்றாலும், சி.பி.ஐ., அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.

இதுகுறித்து ஆந்திர ஊடக வட்டாரங்களில் பேசியபோது, ” ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நடைபெற்ற அரசியல் ஆட்டங்கள் சந்திரபாபு நாயுடுவை உலுக்கிவிட்டது. முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவின் வீடு, அலுவலகங்கள் சோதனைக்குள்ளானது. தலைமைச் செயலகத்திற்குள்ளேயே வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ சோதனை நடைபெற்றது.

முதல்வருக்கு நெருக்கமான உறவினர்கள், தொழிலதிபர் வீடுகளை சோதனை என்கிற பெயரில் புரட்டி போட்டனர். கடந்த இரண்டு வருடங்களில் நாட்டிலேயே அதிகமாக சி.பி.ஐ., வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது தமிழகத்தில் தான். இதே எபிசோட் ஆந்திராவிலும் நடக்காது என்பது என்ன நிச்சயம்! அந்த முன் எச்சரிக்கையுடன் சந்திரபாபு நாயுடு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கருதுகிறோம்’ என்கிறார்கள் அவர்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், மத்திய மோடி அரசுக்கு எதிராக எவ்வளவு அதிக எதிர்ப்பை காட்டுகிறோமோ அவ்வளவு அதிகம் மாநிலத்தில் ஆதரவு அதிகம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் சில கட்சிகள் இருக்கின்றன. அதாவது, மோடி எதிர்ப்பு வாக்குகளை தங்கள் பக்கம் திருப்பும் உத்தியாகவும் இது போன்ற அதிரடிகளை சில தலைவர்கள் அரங்கேற்றுவதாக கருதப்படுகிறது. நாயுடுவை தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் இதே ரீதியில் சிபிஐ-க்கு தடை போட்டிருப்பது இந்த வகைதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

ஆனால் நாட்டின் முதன்மையான ஒரு விசாரணை அமைப்பை இப்படி ஒரு அரசாணை போட்டு ஒவ்வொரு மாநிலமும் தடை செய்துவிட முடியுமா? இதை நீதிமன்றமும், மத்திய அரசும் அனுமதிக்குமா? கேள்விகள் இருக்கின்றன. பதில்களுக்கு காத்திருப்போம்.

 

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chandrababu naidu bans cbi to enter andhra pradesh

Next Story
1744 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த மாணவ சங்க தலைவர்… திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்!திருவள்ளுவர் பல்கலைகழகம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express