ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஒன்று மாநில முதல்வர்களின் பின்னணி குறித்து நடத்திய ஆய்வில், இந்தியாவிலேயே அதிக சொத்துக்களைக் கொண்ட பணக்காரர் முதல்வர் மற்றும் ஏழ்மையான முதல்வரின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஏடிஆர் எனப்படும் இந்த அமைப்பு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாநில முதல்வர்களின் சொத்து விபரம் உட்பட அனைத்து விபரங்கள் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புள்ள மாநில முதல்வர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தை பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 177 கோடி ரூபாயாகும். இவருக்கு அடுத்து, பாஜகவைச் சேர்ந்த அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு 129 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். 48 கோடி ரூபாய் சொத்துகளுடன் பஞ்சாபை சேர்ந்த காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதனைப்போலவே, சொத்து மதிப்பில் கடைசி இடத்தில் இருக்கும் முதல்வர்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. திரிபுராவைச் சேர்ந்த மாணிக் சர்க்கார் 26 லட்சம் சொத்து மதிப்பு கொண்டு ஏழ்மையான முதல்வர் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 30 லட்சம் ரூபாய் சொத்துகளுடன் இரண்டாவது இடத்தையும். ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி 55 லட்சம் ரூபாய் சொத்துகளுடன் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளனர்.
குற்ற வழக்குகளை பொருத்தவரையில், மொத்தமுள்ள 31 முதல்வர்களில் 11 முதல்வர்கள் மீது வழக்குகள் பதிவிடப்பட்டுள்ளன. 26 சதவீத முதல்வர்கள் மீது கொலை, மோசடி உள்ளிட்ட மிக கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 சதவீத முதல்வர்கள் 12-ம் வகுப்பு படித்துள்ளனர் என்றும் 39 சதவீதம் பேர் பட்டதாரிகளாகவும், 32 சதவீதம் தொழில்முறை கல்வி பெற்ற பட்டதாரிகளாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.