சந்திரபாபு நாயுடு - ராகுல் காந்தி சந்திப்பு : பாஜகவிற்கு எதிராக ஒரே அணியில் திரளும் கட்சிகள்

2019 பொதுத் தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்...

சந்திரபாபு நாயுடு ராகுல் காந்தி சந்திப்பு : தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார். சந்திர பாபு நாயுடு ஒரே வாரத்தில் இரண்டு முறை டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு குறித்து சந்திரபாபு நாயுடு குறிப்பிடுகையில் “ இந்த நாட்டினை ஜனநாயத்தை நாம் காப்பற்ற வேண்டும். இது இப்போதைய மிக முக்கியமான தேவையாகும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தேசத்தை காப்போம்” என்று கூறியிருக்கிறார்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் சந்திரபாபு நாயுடும் ராகுல் காந்தியும் சந்தித்து கொள்வது இதுவே முதல் முறையாகும். கர்நாடாகவில் எச்.டி குமாரசாமி முதல்வராக பங்கேற்ற போது இருவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ராகுல் குறிப்பிடும் போது “நாங்கள் ஒரு நல்ல சந்திப்பினை இன்று மேற்கொண்டோம். நாட்டின் ஜனநாயகம் மற்றும் எதிர்காலத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்” என்று கூறினார்.  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “அனைத்து எதிர்கட்சியினரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் எனவும், இன்று நாங்கள் பேசிய விசயங்களை நடைமுறைப்படுத்த முயல்வோம்” என்றும் ட்வீட் செய்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி “எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மக்கள் மத்தியில் இந்தியாவின் எதிர்காலம் குறித்து தெளிவான பார்வை ஒன்றினை உண்டாக்கிட வேண்டும்” என பேசினார். கடந்த காலங்களுக்கு செல்வது என்பது வீண். இப்போதைய நாட்டின் சூழல் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் தான் அதிகம் யோசிக்க வேண்டும் என அவர் பேசினார்.

ரபேல் பேரம் குறித்து கேள்வி எழுப்பிய போது “ஊழல் நடந்துவிட்டது. அதனை முறையாக விசாரிக்க வேண்டிய அமைப்பின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு முறையான விசாரணையால் மட்டுமே என்ன நடந்தது, ஊழல் பணத்தை யார் பெற்றார்கள், மற்றும் யார் ஊழல் செய்தார்கள் என்பதை அறிந்து கொள்ள இயலும். அதைத்தான் இந்த நாடு அறிந்து கொள்ள விரும்புகிறது” என அவர் கூறினார்.

சந்திரபாபு நாயுடு ராகுல் காந்தி சந்திப்பு

இவர்களின் சந்திப்பானது இன்று காலை ராகுல் காந்தியின் இல்லத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும், நேசனல் கான்ஃப்ரென்ஸ் தலைவர் ஃபரூக் அப்துல்லாவையும் சந்தித்து பேசினார். அப்போது பாஜக கட்சிக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைப்பது தொடர்பாக பேசப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சந்திரபாபு நாயுடு மற்றும் ராகுல் காந்தி சந்திப்பு

சந்திரபாபு நாயுடு ஃபரூக் அப்துல்லா மற்றும் சரத் பவார் சந்திப்பு

இவர்களின் சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு ”நாம் நம் எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற வேண்டும். அதற்கான திட்டங்களை தீட்ட வேண்டும். நாம் நம் நாட்டின் நலன் குறித்து முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்” என கூறினார்.

அப்துல்லா கூறுகையில் “மிகவும் கடினமான சூழலில் இந்தியா தற்போது இருக்கிறது” என்று கூறினார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் குலாம் நபி அசாத்தினை விமான நிலையத்தில் வைத்து சந்தித்தார் சந்திரபாபு நாயுடு.

பாஜகவிற்கு எதிராக அணி திரளும் கட்சிகள்

இந்த வருடம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து, ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி வெளியேறியது தெலுங்கு தேசம் கட்சி. தற்போது ஒரே எண்ணங்கள் கொண்ட கட்சிகள் ஒன்றாக இணைந்து பாஜகவிற்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க விரும்புகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

கடந்த முறை டெல்லி சென்ற போது மாயாவதி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஃபரூக் அப்துல்லா, யஷ்வந்த் சின்ஹா, சரத் யாதவ் போன்ற தலைவர்களை சந்தித்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close