N Chandrababu Naidu : ஆந்திரா முன்னாள் முதல் அமைசசரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீதான ஸ்கில் டெவலப்மெண்ட் ஊழல் வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை குண்டூர் வழக்குரைஞர் பிரமோத் குமார் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக செப். 22ஆம் தேதி ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் நாயுடு மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி கே ஸ்ரீநிவாச ரெட்டி நிராகரித்துவிட்டார்.
அப்போது நாயுடு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, 2021 டிசம்பர் 19ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நிலையில், 2023 செப்.7ஆம் தேதி நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். இது, “அரசியல் பழிவாங்கும் விசாரணை” என்பதை தவிர வேறில்லை என வாதிட்டார்.
மறுபுறம், மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், வழக்கை ரத்து செய்ய முடியாது என்று வாதிட்டனர்.
மேலும் நாயுடு நிர்வாக தலைவராக இருந்து ரூ.370 கோடி மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி திட்டமிட்டு ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்றார்.
தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதிக்கு முந்தைய குற்றங்களை விசாரிப்பதற்கு பிரிவு 17A இன் கீழ் முன் அனுமதி தேவையில்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு, செப்.10ஆம் தேதி முதல் காவலில் வைக்கப்பட்டு, ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“