Sreenivas Janyala
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க விஜயவாடாவில் உள்ள மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிபதி மற்றும் சிறப்பு நீதிபதி நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை மாலை உத்தரவிட்டது.
ஆந்திர சி.ஐ.டி மற்றும் சந்திரபாபு நாயுடு சார்பில் வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்து ஆறு மணி நேரம் கழித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. சி.ஐ.டி வழக்கறிஞர்கள் 15 நாட்கள் காவலில் வைக்க கோரினர், அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர்கள் ரிமாண்ட் விண்ணப்பத்தை நிராகரிக்க ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர்.
சந்திரபாபு நாயுடு நீதிமன்ற காவலில் இருக்கும் போது, அவரை விசாரிக்க நீதிமன்றத்திடம் சி.ஐ.டி அனுமதி பெற வேண்டும். ஊழல் தடுப்பு பணியக நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் கே.பட்டாபிராம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, விஜயவாடாவில் இருந்து 200 கி.மீ., தொலைவில் உள்ள ராஜமுந்திரி மத்திய சிறைக்கு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மாற்றப்பட்டார்.
ஆந்திர திறன் மேம்பாட்டு கழக ஊழலில் ஈடுபட்டதாக கூறி நந்தியாலில் சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
2014 முதல் 2019 வரையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது இந்த ஊழல் நடந்ததாகக் கூறப்படுகிறது. ரூ. 371 கோடி அரசு நிதியை ஷெல் நிறுவனங்களுக்கு மாற்றியதாகக் கூறப்படும் வழக்கில் சந்திரபாபு நாயுடு முதன்மை குற்றவாளி என்று சி.ஐ.டி கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“