ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முன்னாள் முதல் அமைச்சருமான சந்திரபாபு நாயுடு பரப்புரையை தொடங்கினார். இது, 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம் ஆகும்.
முன்னதாக கர்னூரில் சந்திர பாபு நாயுடு, “ஜெகன் மோகன் ரெட்டியை நீக்கிவிட்டு, ஆந்திராவை காப்போம்” என்ற பரப்புரையை முன்னெடுத்தார். அப்போது, “2024இல் மக்கள் தெலுங்கு தேசம் கட்சியை ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கவில்லை என்றால், இதுதான் என் கடைசி தேர்தலாக இருக்கும்” என்றார்.
இதற்கிடையில் சந்திர பாபு நாயுடு, டிசம்பர் 9ம் தேதி பாபட்லாவில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார். தொடரந்து, வட கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள பொப்பிலியில் வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டம் நடத்தினார்.
இந்த நிலையில் தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்திற்கும் சென்றார். இதனால், ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் அவர் கட்சியை பலப்படுத்திவருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பொப்பிலியில் பேசும்போது, நம் மாநிலம் ஏன் இந்த அவஸ்தையை எதிர்கொள்கிறது. இங்கு கூடியுள்ள கூட்டம் மாநிலத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக வளர்ந்துவரும் மக்களின் மனநிலையை பேசுகிறது” என்றார். தொடர்ந்து, “தாம் இங்கு முதல் முறையாக வரவில்லையென்றும், தாம் கூட்டத்தை ஈர்க்கும் சினிமா ஆளுமை இல்லை” என்றும் கூறினார்.
அப்போது, “ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கத்தால் மாநிலத்தில் ஒரு பகுதி மக்கள் கூட மகிழ்ச்சி அடையவில்லை” என்றார். மேலும், “கடந்த முறை மக்களிடத்தில் வந்து எனக்கொரு வாய்ப்பு தாருங்கள் என ஜெகன் கேட்டார். அதை நம்பி மக்கள் அவரிடம் கொடுத்தனர். ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை. அவரை தோற்கடிப்பதே மக்களுக்கு ஒரே வழி” என்றார்.
இந்த நிலையில், மாநிலம் ரூ.9.5 லட்சம் கோடி கடனில் மூழ்கியுள்ளது என்று கூறிய நாயுடு, கூட்டத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களிடம் சம்பள பாக்கி மற்றும் வருங்கால வைப்பு நிதி பாக்கிகள் கிடைத்ததா என்று கேட்டார்.
ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் நாயுடுவின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. விலைவாசி உயர்வு முதல் மோசமான சாலைகள் வரை பல்வேறு பிரச்னைகளில் ரெட்டி அரசை கடுமையாக தாக்கி வருகிறார்.
இதற்கிடையில், பாபட்லா கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டணம், வீட்டு வரி உயர்வு குறித்து பேசினார். ஏலூரில், முதல்வரின் மாமா ஒய்எஸ் விவேகானந்த ரெட்டியின் மரணத்தை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, தெலுங்கு மக்கள் எங்கு வாழ்ந்தாலும், ஆந்திரா, தெலுங்கானா, நாட்டின் பிற மாநிலங்கள் அல்லது அமெரிக்கா அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டில் நான் அவர்களின் இதயத்தில் இருக்கிறேன் என்று பொபிலியில் நாயுடு கூறினார்.
மேலும், மாநில இளைஞர்கள் அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் "வேலை வாய்ப்புகளை" பெற முடியும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, “முதலீட்டாளர்கள் மாநிலத்தை விட்டு ஓடுகிறார்கள், இதன் விளைவாக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அமராவதியில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன” என்றார்.
இதையடுத்து, “ஒருபுறம் ஜெகன் உங்களுக்கு 10 ரூபாய் கொடுக்கிறார், மறுபுறம் அவர் உங்களிடமிருந்து 100 ரூபாயைப் பிடுங்குகிறார், ஏனென்றால் எல்லாம் விலை உயர்ந்தது. மக்களுக்கு இது தெரியாது என்ற எண்ணத்தில் முதல்வர் இருக்கிறார், ஆனால் விரைவில் அனைவருக்கும் உண்மை தெரிய வரும்” என்றார்.
மாநிலத்தின் சாலைகள் குறித்து பேசிய நாயுடு, “மாநிலத்தில் சாலைகள் மிகவும் மோசமாக காட்சியளிக்கின்றன. இதில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.