சந்திராயன் 2 கடைசி நேர தோல்வி: அன்று அப்துல்கலாம் சொன்னதை ஒருமுறை திரும்பி பார்க்கலாமா?

தோல்வி முக்கியமில்லை என்றாலும் அதற்காக போட்ட முயற்சிகளை நினைத்து வருந்துவது மனித இயல்புகளில் ஒன்று.

சந்திராயன் 2
சந்திராயன் 2

சந்திராயன் 2 : சந்திராயன் 2 நிலவை எட்டும் வரலாற்று சாதனையில் கடைசி நேரத்தில் தோல்வி கண்டது ஒட்டு மொத்த இந்தியர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்த முயற்சி மட்டும் வெற்றியடைந்திருந்தால் உலகநாடுகளும் இன்று இந்தியாவை கண்டு வியந்து இருக்கும். வெற்றி தோல்வி முக்கியமில்லை என்றாலும் அதற்காக போட்ட முயற்சிகளை நினைத்து வருந்துவது மனித இயல்புகளில் ஒன்று.

முடியும் நேரத்தில் சந்திராயன் 2 தரையிறக்கத்தில் ஏற்பட்ட தோல்வியை நினைத்து இஸ்ரோ சிவன்
கண்கலங்கி நின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் தற்போது வெளியாகி வருகிறது.இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒருமுறை ஞாபகப்படுத்தி பார்க்க வேண்டியது மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பகிர்ந்த வரிகளை தான்.

முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி டாக்டர் ராணுவம், விண்வெளி, விமானம் உள்ளிட்ட ஆராய்ச்சி துறைகளில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர். ஏவுகணை உருவாக்கம் கண்டுப்பிடிப்புகளில் இவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. சுமார் 40 ஆண்டுகால ஆராய்ச்சி பணிகளில் பல ஏவுகணைகளை உருவாக்கியுள்ளார். அதில் செயற்கைகோள்களை அனுப்பி பல சோதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு அப்துல்கலாம் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் 1979 ஆம் ஆண்டு அவர் சந்தித்த முதல் தோல்வியான SLV-III குறித்தும் அந்த தோல்வியை அவர் எப்படி எதிர் கொண்டார் என்பது குறித்து அப்துல்கலாம் பகிர்ந்த நினைவுகள் இதோ !

வெற்றி என்பது ஒன்றின் இறுதிப்புள்ளி, தோல்வி என்பது இடைப்புள்ளி. இடைப்புள்ளிகளின் துணையின்றி இறுதிப்புள்ளியை அடைதல் சாத்தியமல்ல. வெற்றியைக் கொண்டாடத் தவறினாலும் தோல்வியைக் கொண்டாடத் தவறக்கூடாது. ஏனென்றால் தோல்விகள்தான் நம்மை வலுப்பெறச் செய்பவை. அதுதான் நம் பயணத்தை முழுமை பெறச் செய்பவை.

” 1979 ஆம் ஆண்டு அப்போது நான் அந்த ப்ராஜெட்டின் இயக்குனராக பணிப்புரிந்துக் கொண்டு இருந்தேன். செயற்கைக்கோளை சரியான சுற்றுப்பாதையில் வைப்பதே எங்களின் நோக்கம். இந்த ப்ராஜெட்டிற்காக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் எங்களுடன் பணியாற்றினார். சுமார் 10 ஆண்டுகள் இதற்காக கடுமையாக உழைத்தோம்.

வெற்றி கிட்டும் என நாங்கள் நம்பிய நாள். நான் ஸ்ரீஹரிகோட்டாவை அடைந்துவிட்டேன். செயற்கோள் தயார் நிலையில் இருந்தது. கவுண்டவுன் நடந்து கொண்டிருந்தது… டி மைனஸ் 4 நிமிடங்கள், டி மைனஸ் 3 நிமிடங்கள், டி மைனஸ் 2 நிமிடங்கள், டி மைனஸ் 1 நிமிடம், டி மைனஸ் 40 வினாடிகள்

அப்போது கணினி இந்த மிஷினை உடனே நிறுத்தும்படி எங்களுக்கு அறிவுருத்துகிறது. நான் தான் அந்த நேரத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டும். மற்ற எல்லோரும் என் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். எடுத்தேன். முழு நம்பிக்கையுடன் செயற்கைகோளை ஏவினோம்.

நாங்கள் கணினியை நம்பாமல் எங்களை நம்பினோம். செயற்கைகோளை ஏவிய பிறகு 4 நிலைகளை சந்தித்தது. முதல் கட்டம் வெற்றியில் அமைந்தது. இரண்டாம் கட்டத்தில் சோதனை எல்லை மீறியது. கடைசியில் சுற்றுபாதையில் வைக்கப்படுவதற்கு பதிலாக ப்ரோகேம் மாறி அந்த திட்டம் அப்படியே தோல்வியானது.

இருந்த போதும் இதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொண்டேன். முதன்முறையாக நான் கண்ட தோல்வி. அதை எப்படி சரிசெய்வது என்ன யோசித்தேன். வெற்றியை நிர்வகிக்க முடிந்த என்னால் தோல்வியையும் நிர்வகிக்க முடியும் என அன்று தான் உணர்ந்தேன்.

இந்த தோல்வியையும், இதனால் சந்திக்க போகும் அவமானங்களையும் எப்படி சமாளிப்பது என ஒருவித பதற்றத்துடனே அன்று செய்தியாளர்களை சந்தித்து தோல்வியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன். “என் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் நான் என்னுடன் பணியாற்றிய சக விஞ்ஞானிகள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமை பட்டு இருக்கிறேன். அடுத்த வருடம் கண்டிப்பாக வெற்றி படைப்போம் என்றேன்”

சொல்லியது போல் அடுத்த வருடமே வெற்றி அவர்களின் வசமானது.ஜூலை 18, 1980 அன்று, கலாம் தலைமையிலான அதே குழு ரோஹினி ஆர்எஸ் -1 ஐ வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியது. அன்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பும் நிகழ்ந்தது.

அப்துல்கலாம் பேச தொடங்கினார். தோல்வியின் போது முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட கலாம் வெற்றியின் போது அதை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்தார். இந்த ஒட்டுமொத்த வெற்றிக்கும் காரணம் என்னுடன் பணியாற்றியவர்கள் தான் என்றார். இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு மற்றும் முன்னேற்ற வரி இன்றைய நாளில் நமக்கு வேறு எதுவாக இருக்கும்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chandrayaan 2 abdul kalam words about after isros slv 3 mission crashed

Next Story
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி திடீர் ராஜினாமா!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com