சந்திரயன் -2 இன் விக்ரம் லேண்டரின் வேகத்தை தேவையான நிலைக்குக் கொண்டுவர முடியாமல் போனதால் சந்திரனில் தரையிறக்கும் இந்தியாவின் கனவு சிதைந்தது. விக்ரம் தனது தரை இறக்குப் பணியை 1.38 மணிக்கு தொடங்கியது. 13 நிமிடங்களுக்குப் பிறகு இந்த தோல்வி ஏற்பட்டது. விக்ரம் லேண்டரின் வேகத்தை மணிக்கு 6048 கிமீல் இருந்து மணிக்கு 7 கிமீ ஆக குறைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது என்று நம்பப்படுகிறது.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் உள்ள மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளக்ஸ் 13 நிமிடங்களுக்குப் பிறகு லேண்டரிடமிருந்து தரவைப் பெறுவதை நிறுத்தியது. தோல்வி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் தரவில்லை என்றாலும் இஸ்ரோ தலைவர் சிவன், லேண்டருடனான தொடர்பு நாம் இழந்துவிட்டோம் என்று உருக்கமாய் கூறினார்.
இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில் “விக்ரமின் தரை இறக்கும் திட்டம் நிலவிலிருந்து 2.1 கி.மீ உயரத்தில் வரை நல்ல முறையில் காணப்பட்டது. இதற்குப் பிறகு தான், லேண்டரிலிருந்து பெங்களூரில் இருக்கும் மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளக்ஸ் எந்த தகவலும் வரவில்லை. கடைசியாய் வந்த டேட்டாக்களை பகுப்பாய்வு செய்வோம்" என்று கூறினார்.
இந்தியா தனது விண்கலத்தை தென் துருவத்திற்கு அருகே தரையிறக்கி வரலாற்றை உருவாக்கும் விளிம்பில் இருந்ததால் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டது. புன்னகையும் அவ்வப்போது கைதட்டல்களும் இருந்தன. ஆனால் லேண்டருடனான தொடர்பு இழந்தவுடன் உற்சாகம் விரைவில் மௌனமாய் மாறிவிட்டன.
சனிக்கிழமை இரவு சரியாய் 1.38 மணிக்கு விக்ரம் லேண்டர் தரை இறங்கும் பணி ஆரம்பித்தது. 15 நிமிடங்களுக்கு முன்னர் விஞ்ஞானிகளுடன் இந்நிகழ்வை காண இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
அதற்கு முன் கட்டுப்பாட்டு அறை சிக்னல்களைப் பெறுவதை நிறுத்திய உடனேயே சிவனும் பிற அதிகாரிகளும் பிரதமரிடம் நடந்ததை விளக்கினர். "தைரியமாக இருங்கள்" என்று மோடி சிவனுக்கும் பிற விஞ்ஞானிகளுக்கும் நம்பிக்கை அளித்தார்.
சந்திரனில் ஒரு விண்கலத்தை தரையிறக்கும் சந்திரயான் -2 என்பது இந்தியாவின் முதல் முயற்சி. அமெரிக்கா, முந்தைய சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளால் மட்டுமே இதுவரை சந்திரனில் ஒரு விண்கலத்தை தரையிறக்க முடிந்தது.