இந்தியாவின் மகத்தான விண்வெளி சாதனையை ( சந்திராயன் -2) நேரில் பார்க்க ஆசையா?

சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படும் நிகழ்வை நேரில் காண விரும்புபவர்கள், ஜூலை 4ம் தேதி அதிகாலை முதல் தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம்

சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படும் அரிய நிகழ்வை, நேரில் காண்பதற்கான முன்பதிவு, ஜூலை 4ம் தேதி அதிகாலை முதல் துவங்குவதாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சந்திராயன் 1 வெற்றியை தொடர்ந்து, நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்ப உள்ள சந்திராயன் 2 பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. சந்திராயன் – 2 விண்கலம், ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது . 3.8 டன் எடை கொண்ட இந்த விண்கலம், பிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இந்த விண்கலத்தில் 13 வகையான அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தப்படும். செப்டம்பர் 6ம் தேதி நிலவில், இந்த விண்கலம் தரையிறங்கும். நிலவின் தென் பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் சந்திராயன் – 2 ஈடுபட உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணியளவில், GSLV Mk-III ராக்கெட்டின் மூலம், சந்திராயன் – 2 விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த நிகழ்வை நேரில் காண ஓர் அரிய வாய்ப்பு. இதற்கான முன்பதிவு, ஜூலை 4ம் தேதி அதிகாலை நேரத்தில் இருந்து துவங்குவதாக இஸ்ரோ, டுவிட் பதிவில் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கான லிங்க் மற்றும் இணையதள முகவரி குறித்த விபரம் அளிக்கப்படவில்லை.

வானியல் குறித்த அறிவுசார்ந்த விபரங்கள், ராக்கெட்கள் ஏவப்படும் விதம் உள்ளிட்ட தகவல்களை அனைவரும் அறிந்துகொள்ளும் பொருட்டு, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு தளத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் பேர் வரை அமரும் வகையிலான இந்த பார்வையாளர் மாடத்தில் இருந்து ராக்கெட்கள் விண்ணிற்கு ஏவப்படுவதை நேரடியாக காணலாம். PSLV-C45 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வை, 1,200 பேர் நேரடியாக கண்டுகளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில், சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படும் நிகழ்வை நேரில் காண விரும்புபவர்கள், ஜூலை 4ம் தேதி அதிகாலை முதல் தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close