சந்திரயான் 2ன் வெற்றிக்கு பின் திருநெல்வேலி மாவட்டமும் முக்கிய பங்கு வகித்துள்ளது. தமிழகத்தின் திருநெல்வேலியின் மஹேந்திரகிரியில் உள்ள ISRO Propulsion Complex (IPRC) மையம் இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
'சந்திரயான் - 2' விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில், 'இஸ்ரோ' நிலைநிறுத்தியது. நிலவை ஆய்வு செய்யும் முயற்சியில், இந்தியா மீண்டும் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை வெற்றிக்கு காரணமான, 'இஸ்ரோ' விஞ்ஞானிகளுக்கு, நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நிலவின் தென்துருவ பகுதியில், கனிம வளங்கள், தண்ணீர் இருப்பு உள்ளதா, மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய, 'சந்திரயான் -- 2' என்ற, விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' உருவாக்கியது. அந்த விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, இஸ்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான, 'சதீஸ் தவான்' விண்வெளி ஆய்வு மையத்தின், 2வது ஏவுதளத்தில் இருந்து, நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. கடும் எதிர்பார்ப்புக்கு பின் இஸ்ரோவின் சந்திரயான் 2 தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. நிலவை நோக்கி தன்னுடைய அசாத்திய பயணத்தை சாத்தியமாக்கி உள்ளது சந்திரயான் 2. இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின் தென் பகுதியை அடையும். தற்போது வெற்றிகரமாக பூமியின் குறைந்த 170 கிமீ வட்டப்பாதையை சந்திரயான் அடைந்து உள்ளது. செப்டம்பர் 7ம் தேதி நிலவை சந்திராயன் 2 அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணியில் திருநெல்வேலி மாவட்டம்
சந்திரயான் 2ன் இந்த வெற்றிக்கு திருநெல்வேலி மாவட்டமும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது. திருநெல்வேலி மஹேந்திரகிரியில் உள்ள ISRO Propulsion Complex (IPRC) மையம்தான் சந்திரயான் 2 அனுப்பப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மகேந்திரகிரியில்தான் திரவ எரிபொருள் என்ஜின் அதாவது கிரையோஜெனிக் என்ஜின் உருவாக்கப்படுகிறது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் கிரையோஜெனிக் என்ஜின் மூலம் இயங்க கூடியது. இதன் மூலமே சந்திரயான் 2 செலுத்தப்பட்டது.
விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் கிரையோஜெனிக் என்ஜின் மூலம் இயங்க கூடியது. இதில் இரண்டாவது எஞ்சின் கிரையோஜெனிக் என்ஜின் ஆகும். இது மட்டும் 16 நிமிட பயணத்தில் 8 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிரையோஜெனிக் என்ஜின் எப்போதையும் விட இந்த முறை 15% அதிக திறனுடன் இயங்கியது. இதை உருவாக்கியதில் மஹேந்திரகிரி இஸ்ரோ முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு பெருமை
சந்திரயான் 2 திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் இஸ்ரோ தலைவர் கே. சிவன் ஆவார். இஸ்ரோ தலைவர் சிவன், நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள வல்லங்குமாரவிளை கிராமத்தில் பிறந்தவர். சென்ைன எம்.ஐ.டி.யில் ஏரோநாட்டிகல் படிப்பை முடித்த அவர், பின் பெங்களுரில் இந்தியன் அறிவியல் நிறுவனத்தில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். 2006 ஆம் ஆண்டில் மும்பை இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1982 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்தார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக 2015 ஆம் ஆண்டு சூன் முதல் நாளிலிருந்து பொறுப்பேற்றுள்ளார். பி .எஸ். எல். வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றினார். கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சிவனின் பங்களிப்பு இருந்தது. ராக்கெட்டின் அமைப்பு தொடர்பாக சித்தாரா என்னும் பெயரில் மென்பொருளை உருவாக்கினார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 2018 ஜனவரி 12ம் தேதி பதவியேற்றார்.
பெண் விஞ்ஞானிகளின் தலைமையில் சந்திராயன்
சந்திராயன் திட்டத்தின் இயக்குநராக விஞ்ஞானி வனிதா முத்தையா செயல்பட்டு உள்ளார். திட்ட இயக்குனர் பதவி என்பது மொத்த விண்கலம் மற்றும் அதன் உறுப்புகளின் தயாரிப்பு, செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை கண்காணிப்பதும், விண்கலத்தை இறுதிவடிவமாக்கி அது ஏவப்படும்வரையிலான நிலையிலான செயற்பாடுகளுக்கும் பொறுப்பேற்பதும் ஆகும்.
வனிதா முத்தையா, பல்வேறு விண்கலங்களின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். குறிப்பாக, கார்டோசாட் 1, ஓசன்சாட் 2 உள்ளிட்ட விண்கலங்களில் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். Astronautical society of India, இவருக்கு 2006ம் ஆண்டில் சிறந்த பெண் விஞ்ஞானி என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது. Nature எனும் சர்வதேச ஜர்னல் வெளியிட்ட 2019ம் ஆண்டின் கவனிக்கப்பட வேண்டிய விஞ்ஞானிகள் பட்டியலில், வனிதா முத்தையா இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மங்கள்யான் ரீத்து : மற்றொரு விஞ்ஞானியான ரீத்து கரிதால், சந்திராயன் திட்டத்தின் துணை செயல்பாடு இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர் சந்திராயன் விண்கலத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டின் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி என்ற விருதை ரீத்து வென்றுள்ளார். அதுமட்டுமல்லாது, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் திட்டத்திலும் இவரது பங்கு அளப்பரியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.