சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் விண்வெளித் துறை வரலாற்றில் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறி பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) பிற்பகல் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி செயற்கைக்கோள் செலுத்தும் நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
சந்திராயன் 3 விண்கலத்தை சுமந்து விண்ணில் சீறிப் பாய்ந்த LVM 3 M4 ராக்கெட்டின் முதல் 3 அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தன. இதையடுத்து, 179 கி.மீ தொலைவில் சந்திராயன் விண்கலம் 3 புவி நீள் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.
சந்திராயான் 3 விண்கலம் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சந்திராயன் -3 விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் “நிலவிற்கான பயணத்தை ‘சந்திரயான்-3’ மூலம் இந்தியா தொடங்கியுள்ளது. இந்தியவுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார். மேலும், சந்திரயான்-3 விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது: “விண்வெளி ஆய்வில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது; இதற்காக அயராது உழைத்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, விண்வெளி துறை வரலாற்றில் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துள்ளது என்று வாழ்த்து கூறி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, “சந்திரயான்-3 விண்வெளியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது; ஒவ்வொரு இந்தியனின் கனவுகளும், லட்சியங்களும் உயரமாக பறக்கிறது; இந்த சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று; அர்ப்பணிப்புடன் செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு தலைவணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.