சிவிங்கிபுலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் இந்தியாவின் திட்டத்திற்கான வரலாற்று தருணத்தைக் குறிக்கும் வகையில், இடமாற்றம் செய்யப்பட்ட நமீபிய சிவிங்கிபுலிகளில் ஒன்றான சியாயா, கடந்த இரண்டு நாட்களாக மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் நான்கு குட்டிகளைப் பெற்றெடுத்ததாக புதன்கிழமை காலை குட்டிகளைக் கண்டுபிடித்த வன அதிகாரிகள் தெரிவித்தனர். 1952 ஆம் ஆண்டில் நாட்டில் சிவிங்கிபுலிகள் அழிந்துவிட்டதால், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிபுலி குட்டிகள் இவை ஆகும்.
சிவிங்கிபுலி குட்டிகளின் படத்தை ட்வீட் செய்துள்ள சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், “வாழ்த்துக்கள் இந்தியா! அமிர்த காலத்தின்போது நமது வனவிலங்கு பாதுகாப்பு வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு!” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: இந்திய கடற்படையில் 2,585 அக்னி வீரர்கள்: 273 பெண் மாலுமிகள் முதல் முறையாக தேர்வு
சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்திற்கு இன்று ஒரு முக்கியமான நாள். அனைத்து சிவிங்கிபுலிகளும் சிறப்பாக செயல்படுகின்றன. பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட தென்னாப்பிரிக்க சிவிங்கிபுலிகளும் ஒரு மாதத்தை தனிமைப்படுத்தலை முடித்துள்ளன. ஒரு வருடத்திற்குள், அனைத்து ஆப்பிரிக்க சிவிங்கிபுலிகளையும் காட்டுக்குள் விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இரண்டு நமீபிய பெண் சிவிங்கிபுலிகள் இன்னும் பெரிய அடைப்புக்குள் உள்ளன, மேலும் அவை தென்னாப்பிரிக்க சிவிங்கிபுலியுடன் விடுவிக்கப்படும். இதற்கான யோசனை என்னவென்றால், அவை இனச்சேர்க்கை செய்தால், இரண்டு சிவிங்கிபுலிகளுக்கு இடையிலான மரபணு வேறுபாடு அதிக உயிர்வாழ்வு நாட்களை உறுதி செய்யும்,” என்று கூறினார்.
செப்டம்பர் 2022 இல் தேசிய பூங்காவிற்குள் விடுவிக்கப்பட்ட எட்டு நமீபிய சிவிங்கிபுலிகளில் ஒன்று இறந்ததைத் தொடர்ந்து இந்த 4 குட்டிகள் பிறந்துள்ளன. சாஷா என்ற சிவிங்கிபுலி திங்கள்கிழமை (மார்ச் 26) உயிரிழந்தது. நமீபியாவில் சிறைபிடிக்கப்பட்டபோது, கடுமையான சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சாஷா சில நாட்களுக்கு முன் இறந்தது.
“இது (நான்கு குட்டிகள் பிறந்தது) உலக வனவிலங்கு பாதுகாப்பு வரலாற்றில் பெரும் செய்தி. சியாயா சிவிங்கிபுலி மார்ச் 25 அல்லது 26 அன்று பிரசவித்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சியாயாவின் அசைவுகளின் முறை காரணமாக நாங்கள் பிறப்பை எதிர்பார்த்தோம். சிறிது காலம் அதன் நடமாட்டம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. அந்த சிவிங்கிபுலி காடு முழுவதும் சுற்றித் திரிந்த பிறகு மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பியது. அதனால் அது குட்டிகளை பிரசவிக்கும் என்று எதிர்பார்த்தோம். அந்தச் சிவிங்கிபுலி எல்டன் அல்லது ஃப்ரெடி என்ற இரண்டு ஆண் நமீபிய சிவிங்கிபுலிகளுடன் இனச்சேர்க்கை செய்திருக்கும்; எந்த ஆண் சிவிங்கிபுலி என்று சொல்ல முடியாது. காடுகளில், அது ஒரு பொருட்டல்ல, ”என்று சிவிங்கிபுலி திட்டத்திற்கு பொறுப்பான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் எஸ்.பி யாதவ் கூறினார்.
மேலும், சிவிங்கிபுலியின் கர்ப்ப காலம் 60-90 நாட்கள் ஆகும். தனிமைப்படுத்தப்பட்ட அடைப்புகளில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு சிறுத்தைகள் விடுவிக்கப்பட்ட 6 சதுர கிலோமீட்டர் அடைப்பில் சியாயா தனது குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது என்றும் எஸ்.பி.யாதவ் கூறினார்.
எவ்வாறாயினும், வன அதிகாரிகள் இனச்சேர்க்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஓபன் மற்றும் ஆஷாவுடன் ஃப்ரெடி மற்றும் எல்டன் சிவிங்கிபுலிகளுடன் காட்டுக்குள் விடுவிக்கப்பட்டனர், குனோ தேசிய பூங்காவில் காட்டுக்குள் விடப்பட்ட முதல் இரண்டு சிவிங்கிபுலிகள்ஓபன் மற்றும் ஆஷா ஆகும். அதிகாரிகளின் கூற்றுப்படி, ஓபன், ஒரு ஆண், நமீபிய சிவிங்கிபுலிகளில் மிகப்பெரியது மற்றும் மிகவும் திறமையாக வேட்டையாடக் கூடியது.
“சியாயா தனது குட்டிகளுடன் அடைப்பில் வைக்கப்படும், மேலும் அதன் குட்டிகள் வளர்ந்து வலிமையானவுடன், அவை தங்கள் தாயுடன் காட்டில் விடப்படும்” என்று எஸ்.பி.யாதவ் கூறினார். மேலும், பிப்ரவரி 18 அன்று பூங்கா குனோ தேசிய பூங்காவுக்கு வந்த தென்னாப்பிரிக்க சிவிங்கிபுலிகளும் சிறப்பாகச் செயல்பட்டன, என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil