சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்டம் குறித்த முறையான அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டப்பணிகள் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை குறித்த திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்டது. நிதி ஒதுக்கீடு, நிலம் கையகப்படுத்துதல், பல்வேறு அமைப்புகளின் தடையுத்தரவு உள்ளிட்ட காரணங்களால், இந்த திட்டம் நடைமுறைப்படுத்த முடியாமல் காலம் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2020-2021ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், எக்ஸ்பிரஸ் ஹைவே உள்ளிட்ட நெடுஞ்சாலைகள் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2500 கிமீ தொலைவிலான பயன்பாட்டு நெடுஞ்சாலைகளும், 9 ஆயிரம் கி.மீ, தொலைவிலான பொருளாதார மண்டலங்களும், 2 ஆயிரம் கி.மீ. தொலைவிலான கடலோர மற்றும் துறைமுக பயன்பாடும் மற்றும் 2 ஆயிரம் கிலோமீட்டர் அளவிலான ஸ்ட்ராடஜிக் வகையிலான நெடுஞ்சாலைகள் திட்டப்பணிகள் அடங்கும்.
டில்லி - மும்பை எக்ஸ்பிரஸ் ஹைவே உள்ளிட்ட 2 மற்ற திட்ட பணிகள் 2023ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்ட பணிகள் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், 2024ம் ஆண்டிற்குள் இதுமட்டுமல்லாது 6 ஆயிரம் கி.மீ. தொலைவிலான 12 திட்டப்பணிகள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
4 மணிநேரத்தில் சென்னை - விர்ர்ர்ர்...
சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்டம் குறித்து நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து கர்நாடகாவின் ஹோஸ்கோட் வரையிலான 261 கி.மீ. தொலைவிற்கு இந்த சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஹைவே அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், சென்னை - பெங்களூரு பயண நேரம் 4 மணிநேரமாக குறையும். இந்த நெடுஞ்சாலை, தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேசங்களின் வழியாக செல்ல உள்ளது. நிதி ஒதுக்கீடு, நிலம் கையகப்படுத்துதல், பல்வேறு அமைப்புகளின் ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட காரணங்களால், இந்த திட்டம் தொடர்ந்து தடைபட்டு வந்தது.
இந்நிலையில், சென்னை - பெங்களூரு பொருளாதார மண்டல பிரிவில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால், விரையும் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்தில், தமிழகத்தில் 94 கி.மீ, கர்நாடகாவின் 76 கிமீ., மற்றும் ஆந்திராவின் 94 கி.மீ. உள்ளடங்குகிறது.
இந்த திட்டத்திற்காக, கர்நாடகாவில் நிலம் கையகப்படுத்துதல் பணி நிறைவடைந்துள்ளது. நிலம் வழங்கியவர்களில் இதுவரை 80 சதவீதம் பேருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலின் பேரில், இந்த திட்டத்திற்காக 3 வகையான டெண்டர் பேக்கேஜ்கைள வகுத்துள்ளோம். இதுநடைமுறைக்கு வரும்பட்சத்தில், 9 மாதங்களில் இதன் பணிகள் துவங்கிவிடும். 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்த திட்டம் நிறைவடைந்து விடும் என்று அவர் கூறினார்.
தென்னிந்தியாவின் 2 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலான இந்த திட்டத்தின் மூலம், 2 மாநிலங்களுக்கிடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவு மேலும் வலுப்பெறும் என்று வர்த்தக நிபுணர் சஜ்ஜன் ராஜ் மேத்தா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.