சென்னையில் இருந்து மைசூருக்கு உங்களை 2 மணி நேரத்தில் அழைத்து செல்ல புதிய ரயில் அறிமுகமாகிறது. பொதுமக்களின் பயண தூரத்தை குறைக்க தென்னக ரயில் செயல்படுத்தப்படவுள்ள புதிய முயற்சி தான் இந்த புல்லட் ரயில்.
சென்னை டூ பெங்களூர்:
சென்னையில் இருந்து மைசூருக்கு ரயிலில் செல்வதற்கு தற்போது 7 மணி நேரம் ஆகின்றன. பெங்களூரில் இருந்து மேற்கே 150 கிலோமீட்டர் தொலைவில் மைசூர் உள்ளது. சகாப்தி ரயில் மூலம் சென்னையிலிருந்து மைசூருக்கு பொதுமக்கள் 7 மணி நேரத்தில் சென்று வருகின்றனர்.
இந்த பயண தூரத்தை குறைக்கும் வகையில் ஜெர்மன் அரசு புல்லட் ரயில் திட்டத்தை வழிமொழிந்துள்ளது.இந்த ரயில் திட்டம் அமலுக்கு வந்தால் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 120 நிமிடங்களில் சென்றுவிட முடியும். அதாவது, இரண்டு மணி நேரம் மட்டுமே.
இதுதொடர்பாக ஜெர்மனி அரசு திட்ட மாதிரியை தென்னக ரயில்வேயிடம் ஒப்படைத்துள்ளது.
சென்னைக்கும் - மைசூருவுக்கும் இடையே மொத்தம் 435 கிலோ மீட்டர். ஜெர்மனி முன்மொழியும் திட்டத்தை நிறைவேற்றும்போது, மணிக்கு அதிகபட்சம் 320 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க முடியும்.
இந்த திட்டத்தை ஜெர்மனி தூதர் மார்ட்டின் நே, ரெயில்வே போர்டு சேர்மன் அஷ்வனி லோஹானியிடம் அளித்துள்ளார். இதனை நிறைவேற்றுவது தொடர்பான சாத்தியக்கூறுகளும் தென்னக ரயில்வேயிடம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஜெர்மனி தூதர் மார்ட்டின் நே கூறுகையில், “ஜெர்மனி அரசு அளித்த நிதியின் கீழ் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். மிகப்பெரும் அளவில் இடம் கையகப்படுத்தும் அவசியம் இதில் இருக்காது. இந்த திட்டத்தை விட மிகச் சிறந்த ஒன்று எங்களுக்கு இருப்பதாக தெரியவில்லை” என்றார்.
தென்னக ரயில்வேயிடம் ஜெர்மனி அளித்துள்ள திட்டத்தின்படி, சென்னை - அரக்கோணம் - பெங்களூரு - மைசூரு ஆகியவற்றிற்கு இடையே 85 சதவீத ரயில்வே தடங்கள் உயர்த்தப்படும். 11 மலைப்பாதைகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலமாக பயண நேரம் 7 மணியில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.