சென்னையில் பணி புரிந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரி சுராஜ்குமார் துபே மர்ம கும்பலால் கடத்தப்பட்டு மகாராஷ்டிராவில் காட்டுப்பகுதியில் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் சுராஜ்குமார் துபே (27). இவர் கோவையில் உள்ள ஐஎன்எஸ் இந்திய கடற்படையில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவருடைய குடும்பத்தினர் ராஞ்சியில் வசித்து வருகின்றனர்.
கடற்படை அதிகாரியான சுராஜ்குமார் துபே சம்பவம் நடந்த அன்று சென்னை விமான நிலையம் அருகே இருந்த போது அவரை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளனர். அவரை மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்ற மர்ம கும்பல், ராஞ்சியில் உள்ள அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அவர்கள், சுராஜ்குமார் துபேவை கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை விடுப்பதற்கு ரூ.10 லட்சம் பிணையத் தொகை கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும், பணத்தை அவர்கள் சொல்கிற இடத்தில் அதை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியபடி பணத்தை தராவிட்டால் சுராஜ்குமார் துபேவை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
மர்ம கும்பல் விடுத்த இந்த மிரட்டலை சுராஜ்குமார் துபேவின் உறவினர்கள் பொருட்படுத்தவில்லை. அதோடு, மர்ம கும்பல் கேட்டபடி ரூ.10 லட்சம் தரமுடியாது என்று கூறி மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம கும்பல் கடற்படை அதிகாரி சுராஜ்குமார் துபேவை வேவாஜி காட்டுப் பகுதியில் அவரை உயிருடன் தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனிடையே, அந்த மர்ம கும்பலின் மிரட்டல் குறித்து சுராஜ்குமார் துபேவின் உறவினர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், பால்கர் காட்டுப் பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கே நேற்று முன் தினம் (பிப்ரவரி 5) பாதி எரிந்த நிலையில் கிடந்த துபேயின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவரை மீட்டு தஹானு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரது நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் ஐஎன்எஸ் அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கே சுராஜ்குமார் துபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடற்படை அதிகாரியை கடத்திச் சென்று உயிருடன் தீவைத்து எரித்து கொன்ற சம்பவம் தொடர்பாக பால்கர் போலீசார் வழக்கு பதிவுசெய்து மர்ம நபர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் பணி புரிந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரி சுராஜ்குமார் துபே மர்ம கும்பலால் கடத்தப்பட்டு மகாராஷ்டிராவில் காட்டுப்பகுதியில் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"