இஸ்ரோவின் சந்திரயான் -2 வின்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் ஒரு கடினமாக தரையிறங்கிய பின் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, நாசா செவ்வாய்க்கிழமை பதிவிட்ட டுவிட்டில் அது விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களைக் கண்டறிந்ததாகவும் கண்டுபிடித்ததற்கு சென்னையைச் சேர்ந்த ஒரு மென்பொருள் புரோகிராமர் உதவினார் என்று கூறி பாராட்டியது.
சென்னை பெசண்ட் நகரில் உள்ள சண்முக சுப்பிரமணியன் தனது அறையில் ஒரு மடிகணினியில் புகைப்படங்களைப் பார்க்கும் ஒரு சாதாரண பார்வையாளர். அதனால்தான் அவர் உலகமே தேடிக்கொண்டிருந்த விக்ரம் லெண்டரைக் கண்டுபிடிப்பதற்கு தான் மேற்கொண்ட விடாமுயற்சி பற்றி, ஊடகங்களிடம் கூறுகையில் இது ஒரு பெரிய விஷயமல்ல என்று கூறினார்.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
“யார் வேண்டுமானாலும் இதைக் கண்டுபிடித்திருக்கலாம்… இஸ்ரோ அல்லது நாசா அல்லது ஆர்வமுள்ள எந்தவொரு நபரும் கண்டுபிடித்திருக்கலாம். நான் அதை முதலில் கண்டுபிடித்தேன். நான் அதற்கு புதியவனாக இருந்தேன். மேலும் லேண்டரைக் கண்டுபிடிப்பதற்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வரும் மற்றவர்களைக் காட்டிலும் என் ஆர்வம்தான் எனக்கு உதவியது”என்று சண்முக சுப்பிரமணியன் கூறினார்.
செப்டம்பர் 7 அதிகாலைக்குப் பிறகு, விக்ரம் லேண்டர் கடினமாக தரையிறங்கியதாக இஸ்ரோ கூறியபோது, சுப்ரமணியன் நாசாவின் வலைத்தளத்திலிருந்து முதன்மையாகக் கிடைக்கும் புகைப்படங்களிலிருந்து அதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கத் தொடங்கினார்.
அவர் இறுதியாக நிலவில் சுமார் 4 கி.மீ பரப்பளவில் சிதறியுள்ள லேண்டரின் பல பகுதிகளில் ஒன்றை கண்டுபிடித்தார்.
“நாசாவின் சந்திர மறுமலர்ச்சி ஆர்பிட்டரின் (எல்.ஆர்.ஓ) கேமரா சந்திரனின் மேற்பரப்பை அடிக்கடி புகைப்படங்கள் எடுக்கும். அப்படி கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் அது புகைப்படம் எடுக்கும். இஸ்ரோ பணி தோல்வியடைந்த பிறகு, இந்த விபத்துக்கு முன்னும் பின்னும் எல்.ஆர்.ஓ. கேமிரா கிளிக் செய்த படங்களை பதிவிறக்கம் செய்து அவற்றைப் கூர்ந்து பார்த்தேன். ஒவ்வொரு புகைப்படத்தையும் பெரிதாக்கி பிக்சல் பிக்சலா ஆய்வு செய்தேன்.” என்று அவர் கூறினார்.
“லேண்டர் விபத்துக்குள்ளானதாக நம்பப்படும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நான் கவனம் செலுத்தி வந்தேன். பழைய மற்றும் புதிய படங்களை ஒப்பிடும் போது ஒரு புள்ளியை நான் கவனித்தேன். அது பலவற்றில் நான் காணமுடிந்த ஒரே வித்தியாசம். சிலர் அது தூசியாக இருக்கலாம் என்று கருதினர். ஆனால், நான் உறுதியாக இருந்தேன். அதற்கு சிறப்பு காரணங்கள் இருந்தன... உதாரணமாக, ஒளி பிரதிபலிப்புகளில் உள்ள வேறுபாடு. பள்ளங்கள் மற்றும் கற்களிலிருந்து வரும் பிரதிபலிப்புகள் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களிலிருந்து வரும்போது வேறுபடுகின்றன. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருளைச் சுற்றி ஒரு பிரதிபலிப்பு இருக்கும். இதுதான் எனது கணிப்பு சரியானது என்பதை எனக்கு உணர்த்தியது.” என்றார் சண்முக சுப்பிரமணியன்.
மேலும், “நான் அதை இஸ்ரோ மற்றும் நாசாவுக்கு டுவீட் செய்தேன். பின்னர் அக்டோபர் 18 ஆம் தேதி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். இறுதியாக, இன்று காலை, நாசா அதை உறுதிப்படுத்தி பதில் மின்னஞ்சலை அனுப்பியது” என்று கூறினார்.
நாசா ஒரு அறிக்கையில், சுப்பிரமணியன் “எல்.ஆர்.ஓ திட்டத்தின் புகைப்படங்களில் சாதகமாக அடையாளம் கண்டு தொடர்பு கொண்டார். இந்த உதவிக் குறிப்பைப் பெற்ற பிறகு, எல்.ஆர்.ஓ.சி குழு படங்களுக்கு முன்னும் பின்னும் ஒப்பிட்டு அடையாளத்தை உறுதிப்படுத்தியது.” இன்று நாசா அதைத்தான் கூறியது வேறு ஒன்றும் கூடுதலாக இல்லை.
“விபத்துக்குள்ளான இரண்டு நாட்களுக்குப் பிறகு விக்ரம் லேண்டரை இஸ்ரோ ஏற்கனவே கண்டுபிடித்தது. நாங்கள் அதை பொதுவில் அறிவித்தோம்” என்று இஸ்ரோவின் மக்கள் தொடர்பு அலுவலகத்தின் தலைவர் விவேக் சிங் கூறினார்.
இதனிடையே, சண்முக சுப்பிரமணியன் கூறுகையில், தனக்கு ஆதரவாக செயல்பட்டது தனது நிபுணத்துவமின்மைதான் என்று கூறுகிறார். “நீங்கள் ஏதாவது ஒரு நிபுணராக இருக்கும்போது, சில விஷயங்களை நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்வீர்கள். இதுதான் மற்றவர்களை (விஞ்ஞானிகள்) தாமதப்படுத்தியது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வெள்ளை இடமும் ஒரு விக்ரம் லேண்டர் தான்… நிச்சயமாக, எனக்கு பல தவறான நேர்மறைகளும் இருந்தன. ஆனால் நான் இந்த இடத்தை முதன்முதலில் கண்டறிந்த பிறகு, எனது ஆராய்ச்சியின் மூன்றாம் நாளில், நான் பெரிதாக்கி, ஒளியின் வேறுபாடுகளைக் கண்டேன்” என்று சண்முக சுப்பிரமணியன் கூறினார்.
இருப்பினும், இது எளிதானது அல்ல. “நான் ஒவ்வொரு பள்ளத்தையும் நானாகவே கணக்கிட்டு அளவிட்டேன். மேலும், பழைய மற்றும் புதிய புகைப்படங்களுக்கு இடையில் ஒப்பிட்டுப் பார்த்தேன். நான் நாசாவுக்கு எச்சரிக்கைகள் அனுப்புவதற்கு முன்பு, இதற்காக நான்கு அல்லது ஐந்து நாட்கள், ஏழு அல்லது எட்டு மணிநேரம் வேலை செய்தேன்”என்று அவர் கூறினார்.
இஸ்ரோ இன்னும் அவருடன் தொடர்பு கொள்ளவில்லை என்று சுப்பிரமணியன் கூறினார். “இஸ்ரோவிடம் இருந்து எந்த பெருமையையும் நான் எதிர்பார்க்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். இது ஒரு கடினமான தரையிறக்கம் என்று அனைவருக்கும் தெரியும். எப்படியிருந்தாலும் உடைந்த பாகங்களைக் கண்டுபிடிப்பது பெரிய விஷயமல்ல” என்று சண்முக சுப்பிரமணியன் கூறினார்.
மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன், திருநெல்வேலியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் பி.டெக் முடித்தார். கடந்த 12 ஆண்டுகளாக சென்னையில் ஐ.டி. துறையில் பணியாற்றி வருகிறார். அவர் ஒரு சில ஆப்களை வடிவமைத்துள்ளார். அவற்றில் ஒன்று சுனாமி எச்சரிக்கை மற்றொன்று படங்கள், வீடியோக்கள் இல்லாமல் உரை மட்டும் வாசிப்பதற்கும் ஆகும். வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் சென்னை மழை பக்கத்தை நடத்துகிறார்.
சண்முக சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு டுவிட்டில், அவர் எல்.ஆர்.ஓ. துணை திட்ட விஞ்ஞானி ஜான் கெல்லரிடமிருந்து பெற்ற ஒரு மின்னஞ்சலை வெளியிட்டார். அது இந்த வரிகளுடன் முடிந்திருந்தது, “உங்கள் பங்களிப்பில் நிறைய நேரமும் முயற்சியும் இருந்தது என்று நான் நம்புகிறேன். வாழ்த்துகள். உங்கள் கண்டுபிடிப்பு குறித்து பத்திரிகைகளிடமிருந்து சில கேள்விகளை எதிர்கொள்வீர்கள்” என்று குறிபிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.