DEEPTIMAN TIWARY
தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு விவகாரத்தில் மாநில அரசு அலட்சியமாக இருப்பதாக திமுக எம்.பி. டி,ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக மக்களவை எம்.பி. டி.ஆர். பாலு, டில்லியில், இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு என்ன காரணம்?
குடிநீர் ஆதாரமாக விளங்கும் அனைத்து ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டுவிட்டன.. கடந்தாண்டு சென்னையில் உள்ள ஏரிகளில் 2,960 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. இந்தாண்டு மே 29ம் தேதி நிலவரப்படி, அணைகளில் வெறும் 76 மில்லியன் கனஅடிநீர் மட்டுமே உள்ளது. இம்மாத இறுதியில், அதன் அளவு மேலும் குறையும் அபாயம் உள்ளது. இதனால், சென்னையில் அதிகளவு தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சென்னை மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களின் நிலைமை
மாநிலத்தில் உள்ள முக்கிய ஆறுகளான காவிரி, வைகை, அமராவதி உள்ளிட்ட நதிகள் வறண்டுவிட்டன. மாநிலத்தின் ஒட்டுமொத்த குடிநீர் ஆதாரமே அபாயகட்டத்தில் உள்ளது. ஆறுகள், பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன.விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி டெல்டா பகுதிகளில், தண்ணீர் இல்லாததால், பயிர்கள் காய்ந்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நிலைமை இவ்வாறிருக்க, டெல்டா பகுதிகளில், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டமிட்டு நடவடிக்கைகளை துவக்கியுள்ளன. விவசாயிகள் வறண்ட வானிலையால், தண்ணீருக்காக ஏங்கிக்கொண்டிருக்க, இங்கே சிலரோ லோக்சபா வெற்றியை கொண்டாடி கொண்டிக்கின்றனர்.
சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடிற்கு என்ன காரணம்
நிலத்தடி நீர் மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அரசு, இதுகுறித்து முன்னரே நடவடிக்கைகளை துவக்கியிருக்க வேண்டும். ஸ்டாலின் துணைமுதல்வராக இருந்தபோது, கடல்நீரை குடிநீராக்கும் இரண்டு தொழிற்சாலைகளின் கட்டுமான நடவடிக்கைகளை துவக்கிவைத்தார். ஆனால், அவை இதுவரை முடிக்கப்படவில்லை. ஆண்டுகள் தான் கடந்ததேதவிர, அதன்பின் வந்த அரசு, அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை.
இந்த பிரச்னைக்கு தீர்வு தான் என்ன?
சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு தற்காலிக தீர்வு, அண்டை மாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டுவருவதே ஆகும். ஆனால், இதையே, நிரந்தர தீர்வாக நாம் கருதிவிட முடியாது. கடலோர பகுதிகளில் கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலைகளை அதிகளவில் அமைக்க வேண்டும். அடுத்த ஆண்டிற்குள்ளாக, குறைந்தது 20 கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளை அமைத்தால் மட்டுமே, அடுத்த ஆண்டில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை இல்லாமல் இருக்கமுடியும். தண்ணீர் சேகரிப்பு நடவடிக்கைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். தண்ணீர் மேலாண்மையில் மக்களும் போதிய கவனம் செலுத்திட வேண்டும்.நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிலை எவ்வாறு உள்ளது
இரு அரசுகளும், இந்த விவகாரத்தில் மவுனம் ஒன்றையே பதிலாக வைத்துள்ளன. மத்திய அரசு, இந்த விவகாரத்தில் படுமந்தமாகவே உள்ளது. மாநில அரசோ, எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் மவுனம் காத்துவருகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து ரயில்களின் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.