சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் வலதுசாரி குழுவான அகில் பாரதிய சாந்த் சமிதி கடந்த ஒரு மாத காலம் பாதயாத்திரை மேற்கொண்டது. ஒரு மாத கால பாதயாத்திரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராய்ப்பூர் நகரில் முடிவடைந்தது. யாத்திரையின் முடிவில் துறவிகள் “இந்து ராஷ்டிரா” (இந்து நாடு) கோரிக்கையை வலியுறுத்தினர்.
பா.ஜ.க மற்றும் வலதுசாரி குழுக்களான விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆதரிக்கும் இந்தப் பாதயாத்திரை, மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்து சமூக வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு சட்டப்பேரவைக் காலம் முடிவடைய உள்ள நிலையில் விரைவில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
அகில் பாரதிய சாந்த் சமிதியின் பாதயாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சி ராய்ப்பூர் நகர் மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சுவாமி அவதேஷானந்த் கிரி, “இந்துக்கள் கட்டாராக ( அச்சமூகத்தின் மீது தீவிரமாக ஈடுபடும் போது) மாறும் நாளில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் கதவுகள் திறக்கப்படும்” என்றார்.
சித்ரகூடைச் சேர்ந்த மற்றொரு துறவியான ராஜீவ் லோச்சன் பேசுகையில், இந்து ராஷ்டிரம் சத்தீஸ்கரில் தொடங்கி உலகம் முழுவதும் பரவும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறியவர்கள் சிலர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறினர். இது “கர் வாப்சி” (வீடு திரும்புதல்) என்று அழைக்கப்படுகிறது.
ஒரு மாத கால பாத யாத்திரையில், சுமார் 200 சன்மார்க்க சாதுக்கள் (துறவிகள்) சத்தீஸ்கரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய சாலைகள் வழியாக கிராமங்களுக்குச் சென்று இந்து மதத்தின் பெருமையை எடுத்துக் கூறி பரப்பினர். இந்து ராஷ்டிராவின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினர். நாம் அனைவரும் இந்துக்கள் என்றும் எல்லா சாதிகளுக்கும் மேலானதாக இருக்கிறோம் என்றும் கூறினர்.
மதமாற்றத்திற்கு எதிராக போராட நாம் ஒன்றுபட வேண்டும் என்று சத்தீஸ்கர் சந்த் சமிதியின் துணைத் தலைவர் ஆச்சார்யா ராகேஷ் (32) கூறினார். மேலும் விஎச்பியின் உதவியுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், இது எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தது அல்ல என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/