இறுதிசடங்குக்கு பணம் இல்லை: மகனின் சடலத்தை மருத்துவக் கல்லூரிக்கு தானம் வழங்கிய தாய்

இறுதி சடங்கை செய்ய பணமில்லாததால், உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பெண் ஒருவர் தானமாக அளித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

இறந்த தன்னுடைய மகனின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்கை செய்ய பணமில்லாததால், உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பெண் ஒருவர் தானமாக அளித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்தர் மாவட்டத்தை சேர்ந்த பாமன் என்ற 21 வயது இளைஞர், கடந்த திங்கள் கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். இதையடுத்து, அந்த இளைஞர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனினின்றி பாமன் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.

இந்நிலையில், அந்த இளைஞரின் குடும்பத்தினரால், உடலை சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று இறுதி சடங்குகளை செய்ய பணம் இல்லை. அதனால், இளைஞரது உடலை ஜக்தல்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அவரது குடும்பத்தினர் தானமாக அளித்தனர்.

”எங்களுக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை. அதனால், உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக அளித்துவிடுமாறு மருத்துவமனையில் இருந்த ஒருவர் எங்களுக்கு ஆலோசனை கூறினார்.”, என பாமனின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் முதலமைச்சர் ராமன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதனால், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ள நிலையில், முழு விசாரணை நடத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close