ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தது. ஏறக்குறைய 15 நாட்களுக்கும் மேலாக சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருந்து வருகிறார்.
அதேபோல், மலேசியாவில் இயங்கி வந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக மத்திய அரசின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாகவும், அதற்கு ப.சிதம்பரம் உதவியதாகவும் புகார் எழுந்தது.
அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (Foreign Investment Promotion Board) தடையில்லா சான்றிதழை பெறுவதற்காக மேக்சிஸ் நிறுவனம் கார்த்தியின் நிறுவனங்களுக்கு லஞ்சப் பணத்தினை பரிவர்த்தனை செய்ததாகவும் அமலாக்கத்துறையினர் மற்றும் சி.பி.ஐ அமைப்பு இவர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன் நடந்து வருகிறது. சிபிஐ காவல் முடிந்ததை தொடர்ந்து கடந்த 5-ம் தேதி அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தன்னை நீதிமன்ற காவலில் வைத்ததற்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, சிபிஐ பதிலளிக்குமாறு கோரி நோட்டீஸ் விடுத்தது. மேலும், மனு மீதான விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதற்கிடையே, நீதிமன்ற காவலுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் வாபஸ் பெற்றார்.
அதேசமயம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. சிதம்பரம் தற்போது காவலில் இருப்பதால் அவரால் ஆதாரங்களை அழிக்க முடியாது என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சிதம்பரத்தை விடுதலை செய்தால் சாட்சியங்களை அழித்து விடுவார் என்று மன்றாடிய அமலாக்கத்துறை, இப்போது, சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவது தொடர்பான ப.சிதம்பரத்தின் மனு மீது நாளை மதியம் உத்தரவிடப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.