P Chidambaram CBI Arrest News Updates: ப.சிதம்பரம் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அதேசமயம் இதே வழக்கில் அமலாக்கத்துறை திங்கட் கிழமை வரை ப.சிதம்பரத்தை கைது செய்யவும் தடை விதித்தது நீதிமன்றம். ஏர்செல்- மேக்சிஸ் வழக்கிலும் செப்டம்பர் 3-ம் தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுகளால், வருகிற திங்கட்கிழமை வரை ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 21) முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்து அவரது வீட்டுக்குள் புகுந்து கைது செய்தனர். நேற்று மாலை சிபிஐ தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரத்தை, 5 நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சிதம்பரம் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டார். இதற்கிடையே ஏற்கனவே முன் ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது. அதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அந்த மனு இன்று (23-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அதில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Live Blog
INX Media Case P Chidambaram CBI Arrest News Updates: ப.சிதம்பரம் கைது, சிபிஐ காவல், நீதிமன்றம் விசாரணை தொடர்பான தகவல்களை இந்த ‘லைவ் ப்ளாக்’கில் காணலாம்.
இறுதியில் 5 நாள் (ஆக. 26 வரை) சிபிஐ காவலுக்கு அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார். ப.சிதம்பரத்தை கண்ணியமாக நடத்தும்படியும், உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்யும்படியும், குடும்ப உறுப்பினர்களை தினமும் சந்திக்க அனுமதிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 3 வரை தடை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை செவ்வாய்க் கிழமை வரை ஒத்திவைக்க சிபிஐ, அமலாக்கப்பிரிவு தரப்பில் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. எனினும் விசாரணை அமைப்புகள் எந்த நேரமும் ப.சிதம்பரத்தை அழைத்து விசாரிக்கலாம் என உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், அடுத்த விசாரணையை செப்டம்பர் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
அமலாக்கத்துறை வழக்கில் திங்கட்கிழமை வரை கைது செய்யக் கூடாது என ப.சிதம்பரத்திற்கு நிவாரணம் வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். திங்கட் கிழமை இரு அப்பீல் மனுக்களையும் விசாரிப்பதாக கூறியிருக்கிறது நீதிபதி பானுமதி அமர்வு.
இதன்படி திங்கட்கிழமை வரை சிபிஐ காவலில் இருப்பார் ப.சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை திங்கட் கிழமைக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கு தொடர்பான ப.சிதம்பரத்தின் மனுவையும் அதே நாளுக்கு தள்ளிவைக்க அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.
அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு தொடர்பான ப.சிதம்பரத்தின் அப்பீலை இன்றே விசாரிக்கிறது நீதிபதி பானுமதி அமர்வு.
ப.சிதம்பரம் மனு மீதான விசாரணை நீதிபதி பானுமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனுக்கள் ப.சிதம்பரத்தின் கைதுக்கு முன்பு முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டவை என சுட்டிக் காட்டினார். அரசுத் தரப்பு வாதத்திற்கு ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் ஆட்சேபம் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ப.சிதம்பரத்தின் மகனும், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கார்த்தி சிதம்பரம் தனது ட்வீட்டில் தனது தந்தைக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோரை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.
நீதிமன்றத்தில் இருவரின் வாதங்களையும் வீடியோ பதிவு செய்து, சட்ட மாணவர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார் அவர்.
நீதிபதி பானுமதி, போபண்ணா அமர்வில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடுகிறார்கள். அப்போது சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரத்தை விடுவிக்கக் கேட்டு வாதாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.