முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம், காஷ்மீருக்கு கூடுதல் சுயாட்சி அளிக்கப்பட வேண்டும் என கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து ராஜ்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், "காஷ்மீரில் சுதந்திரம் வேண்டும் என கோரும் பெரும்பான்மையானவர்கள் இந்திய சட்டங்களுக்குட்பட்ட கூடுதல் சுயாட்சியை தான் கோருவதாக கூறினார். எனவே, காஷ்மீருக்கு கூடுதல் சுயாட்சி அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய காங்கிரஸ் தகவல்தொடர்பு துறை தலைவர் ரந்தீப் சுர்ஜேவலா, "ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாகும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. தனிப்பட்ட நபரின் கருத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கருத்தாகாது. இந்த ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துகளை தெரிவிக்க உரிமையுண்டு" என்றார்.
இந்த நிலையில், சிதம்பரத்தின் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், "ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சுயாட்சி தருவது என்பது இந்தியாவின் தேசிய நலனுக்கு நேரடியாக முரண்படுகிறது" என்றார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ப.சிதம்பரத்தின் கருத்தை 'அதிர்ச்சி' மற்றும் 'வெட்கக்கேடான' விஷயம் என விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், வளத்திற்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட சர்தார் படேல் பிறந்த குஜராத் மண்ணில் சிதம்பரம் இவ்வாறு பேசியிருப்பது அவமானகரமானது" என தெரிவித்துள்ளார்.