ஜிஎஸ்டி - ஒரு வருட நிறைவு கொண்டாட்டங்கள் எதற்காக? ப.சிதம்பரம் கேள்வி

முதலீட்டாளர்கள், வணிகம் செய்பவர்கள், சிறு வியாபாரிகள் போன்றவர்களுக்கு ஜிஎஸ்டி போன்ற எரிச்சலூட்டும் வார்த்தை வேறேதும் இல்லை

இந்தியர்களின் வரிச்சுமையை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் ஜிஎஸ்டி என்று கூறி மக்களிடம் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், யாராலும் தாங்கிக் கொள்ள இயலாத வரிச் சுமையைத்தான் மக்களிடம் சேர்த்திருக்கின்றது ஜிஎஸ்டி என்று கூறினார் ப.சிதம்பரம்.

முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், இன்று ஜிஎஸ்டி பற்றி மிகவும் காட்டமாக பேசியிருக்கின்றார். ”ஜிஎஸ்டி போன்ற பெரிய மாற்றத்திற்கு தயாராக இல்லாத நாட்டு மக்களிடம், ஜிஎஸ்டியை கொண்டு வந்து சேர்த்து ஒரு வருடம் ஆகிவிட்டது” என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது கூறினார் சிதம்பரம்.

“ஜிஎஸ்டியின் அமைப்பு, கட்டுமானம், உருவாக்கம், செயல்படுத்தும் முறை என அனைத்திலும் தவறு இருக்கின்றது. முதலீட்டாளர்கள், வணிகம் செய்பவர்கள், சிறு வியாபாரிகள் போன்றவர்களுக்கு ஜிஎஸ்டி போன்ற எரிச்சலூட்டும் வார்த்தை வேறேதும் இல்லை என்று நம்புகின்றேன்” என்றார்.

“பொருளாதார வளர்ச்சிக்கு இத்திட்டம் சிறிதும் உதவவில்லை. ஆனால், ஜிஎஸ்டியும், பணமதிப்பு நீக்கமும் சேர்ந்து வணிகத்தினையும், தொழில்களையும், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் நஷ்டமடைய வைத்துவிட்டது. இதன் மூலம் லாபம் பெற்றவர்கள் யார் என்று பார்த்தால் சாமானியர்களை வரிகள் மூலம் மிரட்டி வரும் வரித்துறை தான்” என்று கூறினார் ப. சிதம்பரம்.

ஜிஎஸ்டி பற்றி ஆளும் கட்சி கூறும் போது நடைமுறையில் இருக்கும் வரிச்சுமையினை குறைப்பதற்காகவே ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தினோம் என்றார்கள். ஆனால் இருக்கின்ற சுமையை அதிகப்படுத்தவே தான் ஜிஎஸ்டி வந்திருக்கின்றது.

“தலைமை பொருளாதார ஆலோசகர் அறிவுரையையும் ஏற்றுக் கொள்ளாமல் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அரவிந்த் சுப்ரமணியன் ஆரம்பம் முதலே ஜிஎஸ்டியில் இருக்கும் தவறுகளை சுட்டிக் காண்பித்ததோடு, ஜிஎஸ்டி 28% வரி வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்” என சமீபத்தில் ஓய்வு பெற்ற தலைமை பொருளாதார ஆலோசகர் பற்றியும் குறிப்பிட்டார் சிதம்பரம்.

பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் என இரண்டும் ஏன் இன்னும் ஜிஎஸ்டிக்குள் வரவில்லை என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றார். ஜிஎஸ்டி குறித்து தன்னுடைய ட்விட்டரில் சிதம்பரம் தெரிவித்த கருத்து

காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளரான ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, ஜிஎஸ்டிக்கான எதிர்ப்பினை தெரிவித்து ட்விட்டரில் கருத்து பகிர்ந்திருக்கின்றார்.

ஆனால் மோடியோ, இந்த ஜிஎஸ்டியை வெற்றியடையச் செய்த பொதுமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கின்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close