N Rangasamy | Puduchery | புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் வீடு, கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவில் அருகில் அமைந்துள்ளது. கோவிலில் தினசரி அன்னதானமும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று வாழையிலை போட்டு அறுசுவை உணவும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம், சுற்றுவட்டார பகுதி ஆதரவற்றவர்கள், ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வரும் வெளிமாநிலத்தினர் பயன்பெறுகின்றனர்.
தினமும் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வந்து, ஜிப்மரில் சிகிச்சை பெறும் வெளிமாநிலத்தினர் உதவி கேட்பது வழக்கம்.
அவர்களுக்கு தேவையான பண உதவிகள் செய்வதை முதலமைச்சர் ரங்கசாமி வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சம்காஷி என்ற பெண் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற புதுச்சேரிக்கு வந்திருந்தார்.
அவர் கோரிமேடு பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். தினமும் அவர் அப்பா பைத்தியம் சாமி கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதம் வீட்டு வாடகை கொடுத்து வந்த இவர் 3-வது மாதத்துக்கு வீட்டு வாடகை கொடுக்க பணம் இல்லாமல் தவித்து வந்தார்.
முதலமைச்சர் ரங்கசாமி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வெளிமாநில நோயாளிகளுக்கு பண உதவி செய்வதை மேற்கு வங்க பெண் சம்காஷி கேள்விப்பட்டார்.
இதையடுத்து சம்காஷி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு சென்று தனது நிலைமையை எடுத்து கூறினார்.
உடனே முதலமைச்சர் ரங்கசாமி அந்த பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து உதவி செய்து உடல் நலம் பெற ஆசி வழங்கினார். இதனை அந்த பெண் வீடியோவில் பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“