/indian-express-tamil/media/media_files/2025/05/31/n1qAr3HNi3ZeGo8H6kYR.jpg)
இழப்பை சந்தித்த பின் உத்தியை மாற்றிய விமானப் படை: முப்படைத் தலைமை தளபதி பேட்டி
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ஆரம்பத்தில் இந்திய விமானப்படை இழப்புகளை சந்தித்ததாகவும், பிறகு தனது உத்திகளை மாற்றிக்கொண்டதாகவும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு தொடர்பான ஷாங்க்ரி-லா மன்றத்தில் பங்கேற்ற பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான், பின்னர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இதைத் தெரிவித்துள்ளார்.
3 நாட்கள் நடந்த மோதலில் ஒரு தீர்க்கமான நன்மையை இந்தியா பெற்றது. போர் தொடக்கத்தில் சில இழப்புகள் ஏற்பட்டன, ஆனால் அதன் விவரங்களை சொல்ல முடியாது. முக்கியமானது, அந்த இழப்புகள் ஏன் ஏற்பட்டன, அதன்பிறகு நாம் என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம். எனவே, நாங்கள் உத்திகளை சரிசெய்து, மே 7, 8 மற்றும் 10 ஆகிய நாட்களில் பாகிஸ்தானின் உள்பகுதிக்குள் சென்று விமானப்படை தளங்களை தாக்கினோம். அங்கு துல்லியமாக தாக்குதல் நடத்தி அந்நாட்டின் வான் பாதுகாப்பு சக்தியை அழித்தோம். 10 ம் தேதி இந்திய விமானப்படை அனைத்து வகை போர் விமானங்களையும் பயன்படுத்தியது. இந்தியா நடத்திய தாக்குதலில் பெரும்பாலானவை துல்லியமாக நடத்தப்பட்டது. என்றார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்திய விமானப்படை நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் ஏர்மார்ஷல் பார்தி, இம்மாத தொடக்கத்தில் செய்தியாளர் சந்திப்பில், "இழப்புகள் என்பவை போரின் ஒரு அங்கம்" என்றும், இந்தியா சில பாகிஸ்தானிய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும் கூறியிருந்தார். பாகிஸ்தான் தங்களுக்கு எந்த விமான இழப்பும் ஏற்படவில்லை என்று மறுத்துள்ளது. ஆனால் தங்கள் விமான தளங்கள் சில தாக்குதல்களுக்கு உள்ளானதாகவும், இழப்புகள் குறைவாக இருந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அணுசக்தி மையங்களுக்கு அருகிலுள்ள தளங்கள் மீது சில தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த அணுசக்தி மையங்கள் இலக்கு வைக்கப்படவில்லை என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
"பெரும்பாலான தாக்குதல்கள் மிகத் துல்லியமாக, சில தாக்குதல்கள் நாங்கள் தேர்ந்தெடுத்திருந்த இலக்கின் மையப் புள்ளியிலிருந்து ஒரு மீட்டர் துல்லியத்திற்குள் கூட நிகழ்த்தப்பட்டன" என்று சவுகான் கூறினார்.
சவுகானும், பாகிஸ்தானின் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் சஹிர் ஷம்ஷாத் மிர்ஸாவும், மோதலின்போது எந்த நேரத்திலும் அணு ஆயுதங்கள் பரிசீலிக்கப்படும் அபாயம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர்.
மோதலின் போது அணு ஆயுதங்கள் இருப்பதாக கருதப்பட்ட எந்த இடத்திலும் எந்த ஆபத்தும் இல்லை. அணு ஆயுதங்கள் வரம்பைத் தாண்டுவதற்கு முன்பு நிறைய இடம் இருப்பதாக நான் நினைக்கிறேன், அதற்கு முன்பு நிறைய சமிக்ஞைகள் இருந்தன, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். வழக்கமான நடவடிக்கைகளுக்கு நிறைய இடம் உருவாக்கப்பட்டுள்ளது, இது புதிய விதிமுறையாக இருக்கும். மோதல் நடக்கும்போது மிகவும் பகுத்தறிவுள்ளவர்கள் சீருடையில் இருப்பவர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இந்த நடவடிக்கையின் போது, இரு தரப்பினரும் தங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும் நிறைய பகுத்தறிவைக் காட்டியதைக் கண்டேன்.
சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமான நட்பு கொண்டிருந்தாலும், மோதலின் போது பெய்ஜிங்கிலிருந்து எந்த உண்மையான உதவியும் அதற்கு கிடைக்கவில்லை. ஏப்ரல் 22-ம் தேதி முதல் நமது வடக்கு எல்லைகளில் எந்த அசாதாரண நடவடிக்கையையும் நாங்கள் காணவில்லை. பொதுவாக விஷயங்கள் சரியாக இருந்தன.
மோதலின்போது சீனா பாகிஸ்தானுக்கு செயற்கைக்கோள் படங்கள் அல்லது பிற நிகழ்நேர உளவுத் தகவல்களை வழங்கியிருக்கலாமா என்று கேட்டதற்கு, அத்தகைய படங்கள் வணிகரீதியாகக் கிடைக்கின்றன என்றும், அவற்றை சீனாவிடமிருந்தும் பிற மூலங்களிலிருந்தும் பெற்றிருக்க முடியும் என்றும் சவுகான் கூறினார்.
போர் நிறுத்தப்பட்டிருந்தாலும், பாகிஸ்தானில் இருந்து ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தால் துல்லியமாகவும் தீர்க்கமாகவும் பதிலளிப்போம். இவ்வாறு பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.