சமீபகாலமாக இந்தியாவில் வாட்ஸ்ஆப் வதந்தியினால் தாக்குதல்கள் மற்றும் கொலை சம்பவங்களில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஹைதரபாத், மலக்பேட்டை பகுதியை சேர்ந்த, கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் முகமது அசாம் அகமது. அவருடைய நண்பர்கள் கத்தார் நாட்டினை சேர்ந்த சல்ஹம் எய்டல் குபைசி (38), மற்றும் ஹைதராபாத்தினை சேர்ந்த நூர் முகமது மற்றும் முகமது சல்மான் நால்வரையும் குழந்தை கடத்தவந்தவர்கள் என்று நினைத்து அடித்துள்ளனர் பொது மக்கள்.
கர்நாடக மாநிலம் பிதார் பகுதியில் இருக்கும் தன்னுடைய உறவினர்களைக் காண நால்வரும் வெள்ளி காலையன்று, ஹைதரபாத்தில் இருந்து கிளம்பியுள்ளனர். அவர்களை சந்தித்துவிட்டு, அருகில் இருக்கும் நிலம் ஒன்றினை பார்வையிடச் சென்றுள்ளனர்.
உயிரிழிந்த அசாம்
ஔரத் பகுதியில் இருக்கும் தேநீர் கடை ஒன்றில் நால்வரும் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது மாலை 4.30. பள்ளி முடித்துவிட்டு குழந்தைகள் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, கத்தாரில் இருந்து வாங்கி வந்த சாக்லேட்டுகளை குபைசி அந்த குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த சிலர், அவர்கள் குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து அவர்களின் போட்டோவினையும் அவர்கள் பயணித்த டொயோட்டா இன்னோவாவின் புகைப்படத்தினையும் வாட்ஸ்ஆப் குரூப்களில் பகிர்ந்துள்ளனர்.
அடுத்த கிராமத்தில் இருந்தவர்கள் கைகளில் உருட்டுக்கட்டைகளுடன் காத்திருந்தார்கள். அசாம் தான் வண்டியினை ஓட்டிக் கொண்டு வந்திருந்தார். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக வண்டியை வேகமாக ஓட்ட கட்டுப்பாட்டினை இழந்த வண்டி இறுதியில் அருகில் இருக்கும் கால்வாய்க்குள் விழுந்துவிட்டது.
அவர்கள் நால்வரையும் இழுத்து வந்து பொதுமக்கள் அடித்ததில் அசாம் அங்கேயே உயிரிழந்தார். இது தொடர்பாக 30 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.