மகாராஷ்டிராவில் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட வீடியோவை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததால் அவருக்கு மகாராஷ்டிர மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஜூன் 15 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் 2 சிறுவர்கள் தாக்கப்படும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த வீடியோவுடன் ”இந்த தலித் சிறுவர்கள் செய்த குற்றம் அவர்கள், உயர் ஜாதியினர் கிணற்றில் குளித்ததுதான். மனுவாதி மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் விஷமத்தனமான அரசியலுக்கு எதிராக நாம் குரல் கொடுக்காவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. உயர் சமூகத்தை சேர்ந்தவர்களின் கிணற்றில் குளித்தத்திற்காக, 2 தலித் சிறுவர்கள் நிர்வாணமாக தாக்கப்படுவதை பார்த்து அரசியல் தலைவர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சிறுவர்களின் முகங்களை மறைக்காமல் அவர்கள் நிர்வாணமாக தாக்கப்படும் வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதற்காக ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. அதில், தாக்கப்பட்ட சிறுவர்களின் பெயர்கள், அவர்களின் முகவரியை வெளியிடுவது சிறார் நீதி சட்டத்தின் குற்றமாகும். ஆனால் அதையும் மீறி ராகுல் காந்தி நடந்துக் கொண்டதால் இதுக்குறித்து அவர் உரிய விளக்கத்தை 10 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் நிருப்பம் “ குற்றத்தை தடுக்கத் தவறிய மகாராஷ்டிரா மாநில முதலமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்பாமல், குற்றத்தை வெளி உலகிற்கு காட்டிய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று” என்று கூறியுள்ளார்.